நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஒற்றைத் தீர்ப்பாய மசோதா; கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல் 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி, பிடிஐ
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

மாநில அரசுகளை கலந்தாய்வு செய்யாமல் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. 

நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.  இதற்கு முன்பும் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி இதேபோன்ற மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. 

அப்போது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் அந்த மசோதா  கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த மசோதாவை அறிமுகம் செய்த பேசுகையில், " கடந்த 2013-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு இதே மசோதா மக்களவையில் கொண்டுவரப்பட்டு, அதன்பின் நிலைக்குழு ஆலோசனைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், வரைவு மசோதா 16-வது மக்களவை முடிந்ததும் காலாவதியானது. 

தற்போது மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க 9 வகையான தீர்ப்பாயங்கள் இருக்கின்றன. இதில் 4 தீர்ப்பாயங்கள் தீர்ப்பளிப்பதற்காக 10 முதல் 28 ஆண்டுகள் வரை எடுத்துக்கொண்டன. நதிநீர் விவகாரத்தில் தீர்ப்பளிப்பதற்கு எந்தவிதமான காலக்கெடு இல்லாததால், கால வரையின்றி நீடித்துவருகிறது. இதைக் குறைத்து குறுகிய காலத்துக்குள் தீர்வு கிடைக்கவே இந்த மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

அப்போது எழுந்து பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, " நதிநீர் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கு இதுபோன்ற தீ்ர்ப்பாயம் அவசியமானது" என்றார்.

மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிஜுஜனதா தளம் கட்சி்யின் எம்.பி. பி. மஹதாப் மற்றும் திமுக எம்.பி. டிஆர் பாலு ஆகியோர் இந்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 

நதிநீர் பிரச்சினையில் நீர் என்பது மாநிலம் சம்பந்தப்பட்டது. தீர்வு காணும் முன் மாநிலங்களுடன் தீர்ப்பாயம் ஆலோசனை நடத்துமா? என்ற விளக்கம் அதில் இல்லை என்று தெரிவித்தனர்.

பிஜேடி எம்.பி. மஹ்தாப் பேசுகையில், " இந்த மசோதாவின் நோக்கத்தில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால், மாநிலங்களை கலந்துபேசித்தான் எந்த முடிவும் எடுக்க வேண்டும்" எனத் தெரிவி்த்தார்.

டிஆர் பாலு பேசுகையில், "ஒருநாள் இரவில் அவசரகதியில் இந்த மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது. இதுபோன்ற மசோதாக்களை மாநில அரசுகள் அறியாமல் இருந்தபோதிலும்கூட,  மத்திய அரசு இதுபோன்ற மசோதாக்களை வலிந்து திணிக்கிறது" எனப் பேசினார்.

எம்.பி.க்கள் பேசி முடித்தபின், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை மசோதா- 2019 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினை சட்டம் 1956-ல் திருத்தங்களைக் கொண்டுவந்து, முறைப்படுத்த கொண்டுவரப்பட்டது.

இந்த மசோதாவின் முக்கிய அம்சம் என்னவெனில், பல்வேறு அமர்வுகளைக் கொண்ட ஒரே தீர்ப்பாயம் இருக்கும், தீர்ப்பு வழங்க குறித்த காலக்கெடு விதிக்கப்படும். ஒற்றைத் தீர்ப்பாயத்தின் கீழ் அமர்வு உருவாக்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி இந்தத் தீர்ப்பாயத்துக்குத் தலைவராக இருப்பார்.

இந்தத் தீர்ப்பாயத்தின் மூலம் நதிநீர் பிரச்சினைகளுக்கு  அதிகபட்சமாக 2 ஆண்டுகளுக்குள் தீர்வு காண வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும். தற்போதுள்ள நிலையில், காவிரி, மகாதயி, ரவி, பயாஸ், வன்சதாரா, கிருஷ்ணா நிதி நீர் உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 9 தீர்ப்பாயங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in