Published : 25 Jul 2019 01:23 PM
Last Updated : 25 Jul 2019 01:23 PM

சந்தேகத்துக்குரிய விண்கல் பிஹாரில் விழுந்தது கண்டுபிடிப்பு

(முதல் படம்) விவசாயிகள் விண்கல்லைக் கண்டெடுத்தபோது, (இரண்டாவது படம்) முதல்வர் நிதிஷ்குமார் விண்கல்லைப் பார்வையிடுகிறார்.

சந்தேகத்துக்குரிய விண்கல் பிஹாரில் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

காந்தப் பண்புகளைக் கொண்ட 10 கிலோ எடை கொண்ட விண்கல் ஒன்று பிஹார் மாநிலத்தில் உள்ள மதுபாணி மாவட்டத்தில் விழுந்துள்ளது. விண்கல்லை பாட்னா அருங்காட்சியகத்தில் வைக்க அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பிஹார் அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“மூன்று தினங்களுக்கு முன் (ஜூலை 22 அன்று) லாகாஹி காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள மஹாதேவா கிராமத்தில் விண்கல் ஒன்று  விழுந்தது. வயல்வெளிப் பகுதியில் உரத்த சத்தத்துடன் படுவேகமாக வந்து தரையில் விழுந்து பூமிக்குள் புதைந்த விண்கல்லை அருகிலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள் பார்த்தனர். 

விண்கல் விழுந்த இடத்தில் நிலத்தில் 5 அடி ஆழத்தில் பள்ளம் வெட்டினர். காந்தப் பண்புகள் கொண்ட 13 கிலோ கிராம் கொண்ட இந்த விண்கல்லைத் தோண்டி எடுத்தனர். இந்த விண்கல் முதலில் மாவட்டக் கருவூலத்தில் வைக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டது.  முதல்வர் நிதிஷ் குமாரிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 24) பாட்னாவில் உள்ள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைமுறையில் உள்ள அரசு விதிகளின்படி கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட விண்கல்லை பிஹார் நவீன அருங்காட்சியகத்தில் வைக்கும்படி நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்”.

இவ்வாறு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில், நிபுணர்களின் ஆய்வுக்காகவும் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியவும் தலைநகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அறிவியல் மையத்திற்கு விண்கல் மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x