

புதுடெல்லி
மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட புதிய எம்.பி.க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து கடந்த 25-7-2013-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ராஜா (இந் திய கம்யூனிஸ்ட்), கனிமொழி (திமுக), டாக்டர் வி.மைத்ரேயன், டி.ரத்தினவேல், ஆர்.லட்சுமணன், கே.ஆர்.அர்ஜுனன் (அதிமுக) ஆகி யோரின் பதவிக்காலம் நேற்றுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. இதில் கனிமொழி மக்களவை உறுப்பின ராக தேர்வானதால் ஏற்கெனவே ராஜினாமா செய்து விட்டார்.
இந்த இடங்களுக்கு திமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். வைகோ உள்ளிட்டோர் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக வைகோ பதவியேற்றுள்ளார். வைகோவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் திமுகவை சேர்ந்த சண்முகம், வில்சன் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். தமிழக எம்.பிக்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். பின்னர் வெங்கய்ய நாயுடு, வைகோ கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக டெல்லி சென்ற வைகோ பதவியேற்கும் முன்பே பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டேரை சந்தித்து பேசியது குறிப்பிடத்துக்கது.