

டெல்லி மகளிர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்வாதி மலிவாலின் நியமனத்தை துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் நேற்று ரத்து செய்தார். மேலும் தன்னைக் கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்ட அந்த நியமனம், சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
மகளிர் ஆணையத் தலைவராக பர்கா சிங் செயல்பட்டு வந்தார். அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் ஸ்வாதி மலிவால் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான நவீன் ஜெய்ஹிந்த் என்பவரின் மனைவி ஆவார்.
இந்நிலையில், இவரின் நியமனத்தை ரத்து செய்து துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த நியமனம் சட்டவிரோதமானது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், "டெல்லியில் துணை நிலை ஆளுநரின் அலுவலகம் என்பது ஓர் அரசாங்கமாகவே செயல்படுகிறது.
டெல்லியைப் பொறுத்தவரையில், அரசு என்பது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர்தான் அரசாங்கம் ஆவார்" என்று நஜீப் ஜங் டெல்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.