பாஜக தலைமை தலையசைத்தால் 24 மணிநேரம் கூட கமல்நாத் அரசு தாங்காது: ம.பி. எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை

மத்தியப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா : படம் ஏஎன்ஐ
மத்தியப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

போபால், ஏஎன்ஐ

பாஜக தலைமை ஒரு சிக்னல் கொடுத்தால்போதும், அடுத்த 24 மணிநேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு இருக்காது, என்று எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா எச்சரிக்கை விடுத்துள்ளார்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முதல்வராக கமல்நாத் செயல்பட்டு வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்து, சிவராஜ் சவுகான் முதல்வராக இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 

மொத்தம் உள்ள 231 தொகுதிகளில்  பெரும்பான்மைக்கு 116 எம்எல்ஏக்கள்  தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி 2 எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் 1 எம்எல்ஏ , 1 சுயேட்சை ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. பாஜக 108 இடங்களுடன் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், கர்நாடகத்தில் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக இருந்த குமாரசாமி நேற்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி அதில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்துள்ளார். 

இதுகுறித்து மத்தியப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான கோபால் பார்கவா இன்று செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டி:

“கர்நாடகத்தில் இருந்த அரசியல் சூழலைக் காட்டிலும் மத்தியப் பிரதேசத்தில் மிக மோசமாக இருக்கிறது. கூட்டணி அரசு என்பது சித்தாந்த ரீதியாகவோ, கொள்கை அடிப்படையிலோ இல்லை. பேராசையின் அடிப்படையில் இருக்கிறது.

கூட்டணியில் உள்ளவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருக்கும் பட்சத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள். இதுபோன்று மோசமான சூழல்தான் மத்தியப் பிரதேசத்திலும் இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான அரசு கடந்த 7 மாதங்களாக நீடித்திருப்பது மிகப்பெரிய விஷயம். 

கர்நாடகாவில் ஆட்சி கலைந்ததற்கும் பாஜகவுக்கும் எந்தவிதமாத தொடர்பும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள் என்று நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகிறோம். பாஜகவின் கொள்கைகள், செயல்பாடுகள் ஈர்த்துவருவதால், எங்கள் கட்சியில் வந்து ஆர்வத்துடன் இணைந்துவருகிறார்கள். மத்தியப் பிரதேசத்திலும் இதேப்போன்று எம்எல்ஏக்கள் வந்து இணைந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?

எங்கள் கட்சியின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 தலைமையிடம் இருந்து சிக்னல் கிடைத்துவிட்டால், கமல்நாத் அரசு அடுத்த 24 மணிநேரம் கூட தாங்காது".

இவ்வாறு கோபால் பார்கவாதெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in