Published : 24 Jul 2019 03:57 PM
Last Updated : 24 Jul 2019 03:57 PM

காங்கிரஸுடன் ஜேடிஎஸ் கூட்டணி முறிகிறதா?- குமாரசாமி பதில் | இதுபோல பார்த்தது இல்லை: தேவகவுடா வேதனை 

பெங்களூரு, பிடிஐ

கர்நாடகத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு நேற்று கவிழ்ந்த நிலையில், இனி வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்பது குறித்த கேள்விக்கு ஹெச்.டி. குமாரசாமி பதில் அளித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 105 எம்எல்ஏக்கள் வைத்திருந்த பாஜகவின் தலைவர் எடியூரப்பா ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வி அடைந்தார். 

ஆனால், கர்நாடகத்தில் எதிர் துருவங்களாக இருந்து தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்தன. 

இருவருக்கும் பொது எதிரியான பாஜகவை எதிர்க்கும் நோக்கில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன. 38 எம்எல்ஏக்கள்தான் ஜேடிஎஸ் கட்சிக்கு இருந்தபோதிலும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த காங்கிரஸ் கட்சி துணை முதல்வர் பதவியோடு ஆறுதல்பட்டுக்கொண்டு ஆட்சியில் கைகோர்த்து செயல்பட்டது. 

ஆனால், பொருந்தாத கூட்டணி அமைத்ததால், கூட்டணிக் கட்சிகளும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் எழுந்தன. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிப்படையாகவே முதல்வர் குமாரசாமியை விமர்சித்ததால், அவர் கடும் அதிருப்தி அடைந்து பலநேரங்களில் மனக்குமுறலை வெளிப்படுத்தினார். 

கூட்டணிக்குள் எழுந்த உச்சகட்ட அதிருப்தியால் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் 15 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து மும்பையில் தங்கினார்கள். சுயேட்சை எம்எல்ஏக்கள் இருவர் முதல்வர் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, ஆட்சிக்குப் பெரும்பான்மை இல்லாத சூழல் ஏற்பட்டதையடுத்து, கடந்த 18, 19-ம் தேதிகளி்ல முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்கு 105 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் 99 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டும் இருந்ததால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வி அடைந்து ஆட்சியை இழந்து. ஆட்சிக்கு எதிராக பாஜக சார்பில் 105 வாக்குகள் கிடைத்தன. இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஆளுநர் வாஜுபாய் வாலாவைச் சந்தித்து குமாரசாமி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இந்த சூழலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டம் இன்று பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பின் எதிர்காலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி தொடருமா என்று குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

அதற்கு அவர் அளித்த பதிலில், "நாங்கள் இன்று எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை அழைத்து எதிர்கால நிலைப்பாடுகள் குறித்துப் பேசினோம். எங்களின் கட்சியை வலுப்படுத்துவதே முதல்கட்ட குறிக்கோள், முன்னுரிமை, அதன்மூலம் மக்களிடம் இழந்த நம்பிக்கையைப் பெறுவோம். எதிர்காலத்தில் எந்த மாதிரியான நிலைப்பாடு எடுப்பது குறித்து விரிவாக விவாதிப்போம். 
காங்கிரஸ் கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி அமையுமா என்பது எனக்குத் தெரியாது. பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. இதுகுறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை" எனத் தெரிவித்தார்.

ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கூறுகையில், "மாநிலத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை நினைத்து வருத்தப்படவில்லை. இதற்காக யார் மீதும் குறைகூறவும் இல்லை. முன்னாள் முதல்வரையோ அல்லது மூத்த அமைச்சர்கள் மீதும் பழிபோடவில்லை. 
ஆனால், கர்நாடகத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இதுவரை நான் கண்டதில்லை. ஒரு தேசியக் கட்சியான பாஜக, குதிரை பேரத்தை இப்படி அனுமதித்துள்ளதை என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x