

மைசூரு
எனது முயற்சியால் தான் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என மாண்டியா தொகுதி எம்.பி. சுமலதா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி. மற்றும் ஜூலையில் 31.2 டி.எம்.சி. நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைப் பின்பற்றி கர்நாடக அரசு முறையாக நீர் வழங்கவில்லை
இந்நிலையில், கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3,100 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 8,100 கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சவுகானை தொடர்புகொண்டு தான் வற்புறுத்தியதாகவும், அதனடிப்படையிலேயே காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் மாண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி.யும், நடிகையுமான சுமலதா தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதனால் தான் மத்திய அமைச்சருக்கு தான் எழுதிய கடிதத்தையும் தனது பதிவில் இணைத்துள்ளார்.
ஆனால், இதற்கு மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசு திறந்து விட்ட தண்ணீரை சுமலதா தான் செய்ததாகக் கூறுவது அபத்தமானது என அவர்கள் கூறியுள்ளனர்.