Last Updated : 03 Jul, 2015 05:57 PM

 

Published : 03 Jul 2015 05:57 PM
Last Updated : 03 Jul 2015 05:57 PM

குஜராத் கலவரம்: பிரதமர் மன்னிப்புக் கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

குஜராத்தில் ஏற்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிந்தைய கலவரத்துக்கு தமது அரசின் சில தவறான நடவடிக்கைகளே காரணம் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியதாக, ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் துலாத் கூறியுள்ள நிலையில், அக்கலவரங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் தலைவராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் ஏ.எஸ். துலாத். அவர், வாஜ்பாய் காலத்தில் காஷ்மீர் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் தொடர்பாக துலாத் பேட்டியளித்தார்.

அதில், குஜராத் கலவரத்தை தமது அரசு கையாண்ட விதமும், தங்களின் சில தவறுகளால்தான் கலவரம் ஏற்பட்டது என்பதையும் வாஜ்பாய் வருத்தத்துடன் என்னிடம் தெரிவித்தார்.. கந்தஹார் விமானக் கடத்தலின்போது, அமிருதசரஸில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது உடனடி முடிவுகளை எடுக்க யாரும் தயாராக இல்லை” என்பன போன்ற தகவல்களை அவர் கூறியிருந்தார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் கலவரத்துக்காக அப்போதைய குஜராத் முதல்வரான நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஜோய் குமார் கூறியதாவது:

குஜராத் கலவரத்தால்தான் 2004-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக தோற்றது என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியதாக துலாத் தெரிவித்துள்ளார். மோடி ராஜ தர்மத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பாரத ரத்னா வாஜ்பாயியின் வார்த்தைகளுக்கு நரேந்திர மோடி மதிப்பளிக்கிறாரா? 2002-ம் ஆண்டு நடந்த வெட்கக்கேடானா குஜராத் கலவரங்களுக்கா அவர் தேசத்திடம் மன்னிப்புக் கேட்பாரா?

வாஜ்பாயியின் அரசு, ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சயித் சலாவுதீனுடன் தொடர்பில் இருந்திருக்கிறது. அவரது மகனுக்கு மருத்துக் கல்லூரியில் இடம் அளித்திருக்கிறது. இது பாஜகவின் போலி தேசியவாதத்தைக் காட்டுகிறது. அது ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது, பயங்கரவாதிகளுடனும் பயங்கரவாதத்துடனும் சமரசம் செய்துகொள்கிறது. சலாவுதீனும் அவரது இயக்கமும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள்.

இச்செயல்பாடுகள் மூலம், பாஜக தேசியவாதம் என்ற முகமூடியை அணிந்திருப்பது வெளிப்பட்டுள்ளது.

காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தில் அமிருதசரஸில் இருந்து விமானம் வெளியேற, இடர்பாடு மேலாண்மைக் குழு அனுமதித்துள்ளது. இவ்விவகாரத்தில் அரசு தோல்வியடைந்ததால், 3 மிக மோசமான தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டியிருந்தது. அமிருதசரஸில் இருந்து விமானம் பறப்பதற்கு யார் பொறுப்பேற்பது. அங்கேயே விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால், மசூத் அசார் போன்ற தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள், ஏராளமான அப்பாவிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். விமானக் கடத்தல் சம்பவத்தில் அசிரத்தைக்கான விலையைக் கொடுத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x