Published : 06 May 2014 12:03 PM
Last Updated : 06 May 2014 12:03 PM

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவரானார் லலித் மோடி

ஐபிஎல் போட்டிகளில் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து லலித் மோடிக்கு, பிசிசிஐ தடை விதித்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக லலித் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் கடந்த டிசம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக லலித் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து லலித் மோடியை கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத அளவுக்கு பிசிசிஐ தடை விதித்தது. அவர் மீது பல்வேறு புகார்களையும் பிசிசிஐ தெரிவித்த நிலையில் லலித் மோடி, ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட்டார்.

இதற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மனு தாக்கல் செய்திருந்தது. அதில், பிசிசிஐ ஆட்சேபம் தெரிவித்த பின்னரும் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் மோடியின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது தவறானது. கிரிக்கெட் வாரியத்தின் நற்பெயரைக் கெடுக்கும்வகையில் மோடி நடந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

வழக்கை அடுத்து தேர்தல் முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. விசாரணை முடிந்ததை அடுத்து கிரிக்கெட் சங்கத் தேர்தல் முடிவு இன்று வெளியானது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவராக லலித் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x