

ஆர்.ஷபிமுன்னா
காலாவதியான வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மக்களவையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பியான கே.நவாஸ் கனி வலியுறுத்தி உள்ளார். இதை அவர் மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா மீது பேசுகையில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் தொகுதி எம்.பியான நவாஸ் கனி மக்களவையில் பேசியதாவது:
சாலை வாகனங்களில் பயணம் செய்தவர்களில் ஏராளமானோர் வாகன விபத்துகளில் சிக்கி மரணம் அடைவது பெருகி வருகிறது.
நமது தேசியத் தலைவர்களான கியானி ஜெயில்சிங், ராஜேஷ் பைலட், சாஹித் கோபிநாத் முண்டே ,போன்றோரை நாம் விபத்துகளால் தான் இழந்து விட்டோம். கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த மசோதா செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு விட்டது.
இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது இந்த மசோதா மீண்டும் வந்து இருக்கிறது. எனினும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் கூடிக்கொண்டே போகிறது.
எனவே காப்பீடு திட்டம், ஓட்டுநர் உரிமம் அளிக்கும் கொள்கை, அசுரத்தனமாக வாகனம் ஓட்டுவோர் மீதான கட்டுப்பாடு என பல்வேறு நடவடிக்கைகளில் இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.
நமது நாட்டில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்து போகின்றனர். ஒரு லட்சம் பேர் காயமுற்று விடுகின்றனர் என்று போக்குவரத்துத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இதில் 14 சதவீதம் பேரின் மரணத்துக்கு காரணம் வாகனங்களில் கூடுதல் சுமையை ஏற்றிக் கொண்டு செல்வது தான் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு 20,848 பேர் இவ்வாறாக கொல்லப்பட்டுவிட்டனர்.
18 வயது முதல் 45 வயதுக்குள் இருப்பவர்களால் தான் அதிக விபத்துக்கள் நடந்து வருவதாக தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் பத்து நகரங்களில் அதிக அளவில் சாலை விபத்துகள் நடந்து வருகின்றன.
காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம், கடலூர், வேலூர், ஈரோடு, திருநெல்வேலி, மதுரை ஆகியவையே அந்த நகரங்கள் ஆகும். சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கரூர், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் படிப்படியாக சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டே போகின்றன.
சாலை விபத்துக்களில் இறந்து போவோரில் 43.94 சதவீதம் பேர் இருசக்கர வாகன விபத்துக்களில் ஹெல்மெட் அணியாமல் மரணம் அடைகின்றனர். நான்கு சக்கர வாகனங்களின் மூலமான விபத்துகளில் 27.74 சதவீதம் பேர் இறந்து போகிறார்கள்.
எனவே அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஓலா, உபர் போன்ற வாடகை வாகனங்களின் கட்டணங்கள் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்து விட்டன.
இவற்றை கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். காலாவதியான வாகனங்கள் சாலையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதால் வாகன விபத்துகள் அதிகரிக்கின்றன ஆகவே இவற்றையும் அடக்குகின்ற முயற்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
வாகனம் ஓட்டும் உரிமம் பெற வருவோரில் 50 சதவீதம் பேர் அதை பெற முடியாமல் திரும்பிச் சென்று விடும் அவலநிலை இருக்கிறது. ஆகவே இத்தகைய மக்களுக்கு அரசு உரிய பயிற்சிகள் அளித்து பின்னர் அவர்களுக்கு உரிமம் வழங்குகின்ற ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில் நடக்கின்ற விபத்துகளில் 50 சதவீதத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைச்சர் சில விதிகளை அமுல்படுத்துவதாக இங்கே தெரிவித்திருக்கிறார். இவை சாத்தியமாக, அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து இந்த மசோதாவின் விதிகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.
அப்போதுதான் ஐம்பது சதவிகித இழப்புகளை தவிர்க்க முடியும். நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் ஆம்புலன்ஸ் வசதியை கட்டாயமாக இருக்க செய்ய வேண்டும். சிகிச்சை வழங்குவதற்காக 150 கிலோ மீட்டருக்கு ஓரிடத்தில் என மருத்துவ மையங்களை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.