Last Updated : 23 Jul, 2019 04:10 PM

 

Published : 23 Jul 2019 04:10 PM
Last Updated : 23 Jul 2019 04:10 PM

தன் குட்டி பலியானதற்குக் காரணமான மின் ட்ரான்ஸ்பார்மரை துவம்சம் செய்த தாய் யானை: வன அதிகாரிகள் அதிர்ச்சி

சித்தூர்

யானைகள் பொதுவாக புத்திசாலியானவை என்று கருதப்படுவதுண்டு.  இதனை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய குட்டி ஒன்று ஷாக் அடித்து பலியானதற்குக் காரணமான ட்ரான்ஸ்பார்மர் மின் கம்பத்தை தாய் யானை பெயர்த்து பூமியில் சாய்த்த சம்பவம் சித்தூர் மாவட்ட வன அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

கோபில்லா கோட்டூர் என்ற கிராமத்தில் ஞாயிறன்று ஆண் குட்டி யானை ஒன்று அங்கிருந்த ட்ரான்ஸ்பார்மர் மின் கம்பத்தின் ஒயர் ஒன்றை உரசியதாக் மின்சாரம் தாக்கி உயிரிழந்த்து, தாய் யானையின் கண்முன்னே இது நடந்தது. 

இறந்த தன் குட்டியின் உடலை தூக்க தாய் யானை விடிய விடியப் போராடியுள்ளது. ஆனால் அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாகவே தலைமறைவானது யானை. 

இந்நிலையில் இறந்த குட்டியானைக்கு ஞாயிறு மாலை பூஜை உள்ளிட்ட சடங்குகள் செய்து சடங்கார்த்தமாக அதைப் புதைத்தனர். குட்டி யானையைப் புதைத்த வன அதிகாரிகள் காட்டுக்குத் திரும்பி தாய் யானை திரும்பி வந்து துவம்சம் செய்யக் கூடும் என்று எதிர்பார்த்து சில ட்ரான்ஸ்பார்மர்களுக்கு மின் துண்டிப்பு செய்தனர். 

இவர்கள் பயந்தது போலவே திங்கள் அதிகாலை 3 மணிக்கு தன் குட்டியை பலிவாங்கிய அதே ட்ரான்ஸ்பார்மர் கம்பத்துக்கு அருகில் வந்த தாய் யானை தன் குட்டியைப் பலிவாங்கிய அதே ட்ரான்ஸ்பார்மரை தன் வலுக்கொண்ட மட்டும் இழுத்துக் கீழே தள்ளி தன் கோபத்தை வெளிப்படுத்தியது. மேலும் தாறுமாறான ஆவேசத்துடன் மற்ற ட்ரான்ஸ்பார்மர்களையும் சாய்த்துப் புரட்டி போட முயன்று பிறகு தன் முயற்சியை கைவிட்டது. 

மேலும் தன் குட்டியைப் புதைத்த இடத்துக்கு போய் அங்கு பயங்கரமாக பிளிறியது. இது அனைத்தையும் அச்சத்துடன் சிலர் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர். கடைசியாக ஒருமுறை தன் குட்டியைப் புதைத்த இடத்தின் ஈர முண்டில் கிடந்த கிளை ஒன்றை தூக்கி அடித்து தன் கோபத்தையும் குட்டியை இழந்த துயரத்தையும் வெளிப்படுத்திச் சென்றது. 

இது குறித்து பாரஸ்ட் ரேஞ்ச் ஆபீசர் மதன் மோஹன் ரெட்டி கூறும்போது, “மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருப்பதற்காக நல்ல வேளையாக மின்சாரத்தைத் துண்டித்தோம், நிச்சயம் தாய் யானை ஆவேசமாக வரும் என்பதை எதிர்பார்த்தோம். மேலும் 2 நாட்களுக்கும் அங்கு மின்சாரத் துண்டிப்பு இருக்கும்” என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x