

புதுடெல்லி, பிடிஐ
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளதால், சுயேட்சை எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்த மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி இருக்கின்றனர். இவர்களை சமாதானப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன.
இதற்கிடையே 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர் இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்ஏ ராமலிங்க ரெட்டி தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில்,முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வாரம் விவாதம் நடைபெற்ற நிலையில் அவையை 22-ம் தேதிக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். ஆளுநர் விதித்த கெடுவையும், சபாநாயகர் கண்டுகொள்ளவில்லை.இதற்கிடையே, சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹெச். நாகேஷ், ஆர். சங்கர் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் 22-ம்தேதி(இன்று) மாலைக்குள் கர்நாடக சட்டப்பேரவையில் ஆளும் கங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. அந்த மனுவில் " கர்நாடகத்தில் ஆளும் ஜேடிஎஸ்,காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டநிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் நடத்தவில்லை. மைனாரிட்டியாக இருக்கும் ஒரு அரசாங்காம், நிர்வாகத்தை நடத்த உரிமையில்லை. ஆளுநர் அரசமைப்புச்சட்டம் 175(2) விதியின் கீழ் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் இன்னும் நிரூபிக்காமல் இருக்கிறார்கள். அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி, போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தல், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நிர்வாக ரீதியான மாற்றங்களைச் செய்கிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இந்த இரு மனுக்களோடு காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இணைந்து மனுத்தாக்கல் செய்திருந்தன. இந்த இரு மனுக்களை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுக்க மறுத்துவிட்டது.
இந்த சூழலில் கர்நாடகச் சட்டப்பேரவை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. அவையை ஒத்திவைக்கும் முன் பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார், " நாளை(இன்று) மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தை நடத்தி முடித்து 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் " என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் சுயேட்சை எம்எல்ஏக்கள் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகினார். அப்போது, வழக்கறிஞர் சிங்வி கூறுகையில், " கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடித்துவிடுவதாக சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், சபாநாயகரின் உறுதிமொழியை ஏற்று, சுயேட்சை எம்எல்ஏக்கள் மனுவை நாளை விசாரணைக்கு எடுப்பதாக உத்தரவிட்டார்