Published : 23 Jul 2019 01:52 PM
Last Updated : 23 Jul 2019 01:52 PM

மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்ட திருத்தம் கூடாது: மக்களவையில் கனிமொழி கண்டனம்

மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவின் பல்வேறு சட்டப் பிரிவுகளும் மாநில உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதால் அவற்றை நீக்க வலியுறுத்தி திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிமுறைகளை கடுமையாக மாற்றும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மக்களவையில் இன்று (ஜூலை 23) இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவில் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த பல்வேறு திருத்தங்களும் இடம்பெறவில்லை.

மாநிலங்கள் விரும்பினால் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை பின்பற்றாமல் இருக்கலாம் என அமைச்சர் கட்கரி கூறுகிறார். ஆனால் அது வெறும் வாய்மொழி உத்தரவாக மட்டுமே இருக்கிறது. மாநில உரிமைகளில் மீண்டும் மத்திய அரசு தலையிடுகிறது.

(அவர் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போதே சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவைக்குள் நுழையஅவையில் நீங்கள் இல்லாதபோது நான் உங்களைத்தான் பாராட்டி பேசிக் கொண்டிருந்தேன் என்றார் கனிமொழி ) 

தமிழகத்தில் சாலை போக்குவரத்தை மாநில அரசு நிர்வகிக்கிறது. இது லாப நோக்கமற்ற போக்குவரத்துக் கழகம். இருந்தாலும்கூட மாநிலத்தின் கடைகோடி பகுதிகள் வரை போக்குவரத்து வசதியை உறுதி செய்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்துத் துறையில் தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தால் அவை லாபத்தை மட்டுமே பிரதானமாகப் பார்க்கும். மேலும், தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. மாநிலங்கள் சரியாக இயங்கும்போது மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும்.

வாகன ஓட்டுநர்களுக்கு கல்வித் தகுதி கட்டாயம் என்ற விதி மீண்டும் கல்லாமையையே ஊக்குவிக்கும். அந்த பிரிவை அரசு கண்டிப்பாக நீக்க வேண்டும்" என்று பேசினார்.

முன்னதாக, இந்த சட்ட மசோதா மாநிலங்களின் உரிமையை எந்த விதத்திலும் பறிக்காது மாறாக ஊழலை ஒழிக்கவும், சாலை பாதுகாப்பை அதிகரிக்கவும், போக்குவரத்தில் தொழில்நுட்ப மேம்பாடுகளைப் புகுத்தவுமே திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது எனக் கூறியிருந்தார்.

புதிய மசோதாவின் சில கெடுபிடிகள்..

1. சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால், வசூலிக்கப்படும் அபராதம் 100 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

2. ஹெல்மெட்  அணியாவிட்டால் அபராதம் 100ல் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும். 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

3. ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை மீறி வாகனம் ஓட்டுவோருக்கான அபராதத் தொகை 500- ல் இருந்து பத்தாயிரம் ரூபாய் அதிகரித்து வசூலிக்கப்படும்.

4. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் இனிமேல் 2000 ரூபாய்க்கு பதில் 10,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். 

5. வேகமாக வாகனத்தை ஓட்டுதல், பந்தயத்தில் ஈடுபடுதல் போன்ற விதிமீறல்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

6. அதிக அளவு பாரம் ஏற்றினால்  டன்னுக்கு தலா 2000 ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்படும். 

7. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இவ்வாறான கெடுபிடிகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x