

விஜயவாடா,
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு, தனியார் கூட்டாகச் செயல்படும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேறியது.
நாட்டிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் எனும் மசோதா நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியைத் தோற்கடித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அங்கு முதல்வராக ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
ஆந்திராவில் தற்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. சட்டப்பேரவையில் நேற்று ஆந்திரப் பிரதேச தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கும் 2019 மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மசோதாவின்படி ஆந்திர மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு, தனியார் கூட்டில் செயல்படும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவை 75 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீதம் மட்டுமே பிற மாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரு நிறுவனம் தனக்குத் தகுதியான வேலையாட்களை உள்ளூரில் இல்லை என்று கூறி உள்ளூர் மக்களை வேலைக்கு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தைக் கூறி தப்பிக்க முடியாது. உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தி அதற்குத் தகுந்த மாதிரி அரசின் உதவியால் பயிற்சி அளிக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் காலாண்டுக்கு ஒருமுறை உள்ளூர் மக்கள் எத்தனை பேருக்கு வேலை வழங்கியுள்ளோம் எனும் அறிக்கையையும் அரசுக்கு நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மசோதா நேற்று ஆந்திர சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. உள்ளூர் மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு வழங்கும் இந்த மசோதாவுக்கு மாநிலத் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
இதற்கு முன் மத்தியப் பிரதேச அரசு உள்ளூர் மக்களுக்கு 70 சதவீதம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றி இருந்தது. ஆனால், 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி முதன் முதலில் ஆந்திர மாநில அரசுதான் மசோதா நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி அளித்த வாக்குறுதியில், தாங்கள் ஆட்சி்க்கு வந்தால், மாநிலத்தில் வேலையின்மையைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.