

15-வது மக்களவையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை கலைத்தார். இந்நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்தது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் துறைச் செயலர் வேணு ராஜாமணி கூறியதாவது:
15-வது மக்களவையைக் கலைப்பது தொடர்பான மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், அரசியலமைப்புச் சட்டம் 85-வது பிரிவு துணைப்பிரிவு (பி) உட்பிரிவு 2ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களவையைக் கலைத்தார்” என்றார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் சனிக்கிழமை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடியது. அப்போது, 15-வது மக்களவையை உடனடியாகக் கலைக்கும்படி குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கியது.
இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கமல்நாத், குடியரசுத் தலைவரைச் சந்தித்து மக்களவையைக் கலைப்பதற்கான அமைச்சரவையின் பரிந்துரையை அவரிடம் அளித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தலைமையிலான மூவர் குழு, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களின் பெயர் அடங்கிய பட்டியலை, குடியரசுத் தலைவரிடம் அளிக்கவுள்ளது.