இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபியுங்கள்: கர்நாடக சபாநாயகர் முதல்வர் குமாரசாமிக்கு கெடு

கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் : கோப்புப்படம்
கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் : கோப்புப்படம்
Updated on
2 min read

பெங்களூரு, ஐஏஎன்எஸ்

கர்நாடகத்தில் ஆளும் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசு சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க  வேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கெடு விதித்துள்ளார்.

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்து, மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளனர்.  2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று,  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்

முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த  18,19 தேதிகளில் விவாதம் நடந்தது, அது நிறைவடையாமல் சபாநாயகர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில், நேற்று சட்டப்பேரவை கூடி நம்பிக்கை வாக்கெடுப்பு மீது விவாதம் நடத்தியதில் பல்வேறு தலைவர்கள் பேசினார்கள்.

அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கக் கோரி முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை ஏற்க சபாநாயகர் ரமேஷ் குமார் மறுத்துவிட்டார். மேலும், மும்பையி்ல் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவிட்டும் அவர்கள் வரவில்லை என்று ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சி தலைமை சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தன.

அந்தப் புகாரின் அடிப்படையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை 11 மணிக்கு தன்னைச் சந்திக்க வேண்டும் எனக் கோரி சம்மன் அனுப்பி சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்

இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. ஆனால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒத்துழைக்கவில்லை. முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் தொடர்ந்து அவகாசம் கேட்டனர்.

அப்போது முதல்வர் குமாரசாமி பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தில் நாளை காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியினர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு  வர இருக்கிறது. அந்த வழக்கில் உத்தரவு கிடைக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை புதன்கிழமைக்குத் தள்ளிவைக்க வேண்டும்" எனக் கோரினார்

ஆனால், இதற்கு சபாநாயகர் ரமேஷ் குமார் மறுத்துவிட்டார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, " நாளை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பின் விவாதத்தை  நடத்தி முடித்து, இரவு 8 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்" என்றார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் ரமேஷ் குமார், " நாளை (இன்று) மாலை 4 மணிக்குள் விவாதம் அனைத்தையும் முடிக்க வேண்டும். மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க  வேண்டும். நாளை காலை 10 மணிக்கு அவையை ஒத்திவைக்கிறேன் " என்று உத்தரவிட்டார்.

இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்று காலையில் இருந்து காத்திருந்த பாஜக எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மாநிலத் தலைவருமான எடியூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், " சபாநாயகர் ரமேஷ் குமார் கடந்த 18-ம் தேதியில் இருந்து 4-வது முறையாக துரோகம் செய்துவிட்டார். திங்கள்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவோம் எனக் கூறி இன்றும் ஏமாற்றிவிட்டார்" எனக் ஆதங்கத்துடன் கூறிச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in