

சி.பிரதாப்
ஸ்ரீ ஹரிகோட்டா
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 47 நாள் பயணத்துக்குப் பிறகு, செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் அது தரையிறங்க உள்ளது.
நிலவைப் பற்றிய ஆராய்ச்சிக் காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008-ல் அனுப்பிய ‘சந்திரயான்’ விண்கலத் தின் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்த சந்திரயான், அங்கு நீர் இருப்பதை உறுதிசெய்தது.
இதையடுத்து, நிலவில் தரை யிறங்கி ஆய்வு செய்யும் வகையில் ‘சந்திரயான்-2’ திட்டத்தை செயல் படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் ரூ.604 கோடியில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.
இந்த விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலமாக கடந்த 15-ம் தேதி விண் ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டி ருந்தது. ராக்கெட் புறப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருந்த நிலையில், அதன் கிரையோஜெனிக் இயந் திரத்தில் ஹீலியம் வாயுக் கசிவு இருப்பதை விஞ்ஞானிகள் கண் டறிந்தனர். ராக்கெட் ஏவப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு, 22-ம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத் தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண் கலம் நேற்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடங்களில், திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் விண்கலத்தை மார்க்-3 வெற்றிகரமாக நிலைநிறுத் தியது. இதையடுத்து, ராக்கெட்டின் பயணத்தை கவனித்து வந்த இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
14 வகை நவீன கருவிகள்
சந்திரயான் விண்கலம் 3,850 கிலோ எடை கொண்டது. இதில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என 3 கலன்கள் உள்ளன. ஆர்பிட்டர் கலன், நிலவை ஓராண்டு சுற்றி வந்து ஆய்வு செய்யும். ‘விக்ரம்’ என்ற லேண்டர், நிலவில் தரை யிறங்கும். ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் நிலவின் மேற்பகுதியை ஆய்வு செய்யும். இதற்காக ஆர் பிட்டரில் 8, லேண்டரில் 4, ரோவரில் 2 என மொத்தம் 14 வகையான நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலவைச் சென்றடைந்ததும் தனித்தனியாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். விண்கலத்தில் உள்ள முப்பரிமாண கேமராக்கள், நிலவை புதிய கோணங்களில் படம் எடுத்து அனுப்பும்.
பூமியை சுற்றும்
சந்திரயான் விண்கலம் அடுத்த 23 நாட்களுக்கு குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரம், அதிகபட்சம் 39,120 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுப் பாதையில் பூமியை சுற்றிவரும். அதன் பிறகு, பூமியின் சுற்றுப்பாதை யில் இருந்து விலகி, நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும்.
7 நாள் பயணத்துக்குப் பிறகு, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-2 செல்லும். நிலவின் சுற்றுப்பாதையில் 13 நாட்கள் சுற்றிவரும்.
தனியே பிரியும் லேண்டர்
நிலவில் இருந்து 100 கி.மீ. தூரத் தில் இருக்கும்போது, அதில் இருந்து ‘விக்ரம்’ என்ற லேண்டர் கருவி தனியே பிரிந்து நிலவை நோக்கி பயணிக்கும். அப்போது மணிக்கு 6,120 கி.மீ. என்ற வேகத் தில் அது செல்லும். அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, நில வில் இருந்து 400 மீட்டர் உயரத்தில் லேண்டர் அப்படியே அந்தரத்தில் நிறுத்தி வைக்கப்படும். சுமார் 12 விநாடிகள் அந்தரத்தில் நிற்கும் லேண்டர், நிலவின் தரைப்பகுதியை படம் பிடித்து பூமிக்கு அனுப்பும்.
பிறகு, இன்னும் சற்று கீழே இறக்கப்பட்டு 100 மீட்டர் உயரத்தில் லேண்டர் நிறுத்தப்படும். எந்த பகுதியில் தரையிறங்குவது என் பதை அதில் உள்ள சென்சார்கள் ஆராயும். 25 நிமிடங்கள் சோதனை செய்து சரியான இடத்தை தேர்வு செய்யும். பிறகு, மீண்டும் கீழே இறக்கப்பட்டு, நிலவில் இருந்து 10 மீட்டர் தூரத்துக்கு வந்ததும், லேண்டரின் வேகம் மேலும் குறைக்கப்படும்.
நிலவின் தென் துருவம்
மொத்தம் 47 நாள் பயணத்துக்கு பிறகு, செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் உள்ள மான்சினஸ்-சி, சிம்பீலியஸ்-என் ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையே லேண்டர் மெதுவாக தரையிறங்கும். இறங்கிய 15-வது விநாடியில் முதல் படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பும்.
லேண்டர் 1,471 கிலோ எடை கொண்டது. சூரிய ஒளியில் இருந்து 450 வாட்ஸ் மின்சக்தியை தயாரிக் கும் திறன் உடையது. நிலவில் ஏற்படும் நில அதிர்வுகள், நிலவின் வெப்பம், மேற்பரப்பில் உள்ள தனி மங்கள் போன்றவற்றை கணக்கிடும் கருவிகள் இதில் உள்ளன.
6 சக்கர ரோவர்
நிலவில் லேண்டர் தரையிறங்கிய 4 மணி நேரத்துக்குப் பிறகு, அதில் இருந்து ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் வெளியே வரும். அது தனது 6 சக்கரங்களின் உதவி யுடன் நிலவில் 500 மீட்டர் தூரம் வரை ஊர்ந்து சென்று, ஆய்வில் ஈடுபடும். லேண்டர், ரோவர் இரண் டும் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற் கொள்ளும். ஆய்வில் கிடைக்கும் புகைப்படங்கள், தகவல்களை 15 நிமிட இடைவெளியில் பூமிக்கு அனுப்பும்.
நிலவில் ஹீலியம் வாயு மூலக் கூறுகள், நிலவு உருவான விதம், நீர்நிலைகள், தனிமங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்வதே சந்திரயான்-2 திட்டத்தின் முக்கிய பணியாகும். இது வெற்றியடைந் தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, நில வில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
நிலவுக்கு மனிதனை அனுப்பு வதற்கான முன்னோட்டமாக சந்திர யான்-2 திட்டம் கருதப்படுகிறது. சந்திரயான்-2 திட்டத்தின் இயக்குநர் களாக ரீத்து கரிதால், தமிழகத்தின் வனிதா முத்தையா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.