ஸ்வச் பாரத்தை இழிவுபடுத்தும் தொனியில் கருத்து: ப்ரக்யா தாகூருக்கு பாஜக மேலிடம் கண்டிப்பு

ஸ்வச் பாரத்தை இழிவுபடுத்தும் தொனியில் கருத்து: ப்ரக்யா தாகூருக்கு பாஜக மேலிடம் கண்டிப்பு
Updated on
1 min read

"கழிவறைகளையும் சாக்கடைகளையும் சுத்தம் செய்ய நான் எம்.பி.யாகவில்லை.." என பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை இழிவுபடுத்தும் தொனியில் சர்ச்சைக் கருத்தைக் கூறிய பாஜக எம்.பி. பிரக்யா தாகூரை கட்சி மேலிடம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  மத்தியப் பிரதேச மாநிலம் ஷெஹோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய ப்ரக்யா தாக்கூர் "நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டது உங்கள் பகுதி கழிவறைகளையும், சாக்கடைக் கால்வாய்களையும் சுத்தம் செய்வதற்காக அல்ல. எனக்கான பணி என்னவோ அதை நான் சிரத்தையுடன் நேர்மையாக சிறப்பாக செய்வேன். இதை நான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்கிறேன், என்றும் சொல்வேன். உங்கள் பகுதியில் உள்ள சிறு சிறு பிரச்சினைகளை உள்ளாட்சி அமைப்புகள் உதவியுடன் நீங்களே சரி செய்யுங்கள். சின்ன விஷயங்களுக்கெல்லாம் என்னை தொலைபேசியில் அழைக்காதீர்கள்" எனக் கூறியிருந்தார்.

பாஜக தொண்டர் ஒருவர் தங்கள் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யக் கோரியபோது அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
ப்ரக்யாவின் இந்தக் கருத்து பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள மதிப்பீட்டையே காட்டுகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், பிரக்யா தாக்கூர் டெல்லி பாஜக அலுவலகத்திற்கு இன்று (திங்கள்கிழமை) வந்தார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்தார். அப்போது கட்சியின் கொள்கைகள், திட்டங்களுக்கு விரோதமாக எந்த ஒரு கருத்தையும் சொல்ல வேண்டாம் என கட்சித் தலைவர் எச்சரித்திருக்கிறார்.

நட்டாவுடனான சந்திப்புக்குப் பின்னர் காரில் வெளியே வந்த ப்ரக்யா செய்தியாளர்களின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் மவுனமாகச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in