Published : 22 Jul 2019 04:29 PM
Last Updated : 22 Jul 2019 04:29 PM

132 கிராமங்களில் 3 மாதங்களில் ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை.. அதிரவைக்கும் உத்தர்காசி மாவட்ட புள்ளிவிவரம் 

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த மூன்று மாதங்களில் ஒரே ஒரு பெண் குழந்தைகூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

அரசு ஆவணங்களின்படி இந்த 132 மாவட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களில் மொத்தம் 216 குழந்தை பிறந்துள்ளன. இவற்றில் ஒன்றுகூட பெண் குழந்தை இல்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு மாவட்ட் ஆட்சியர் ஆஷிஷ் சவுகான் பேட்டியளித்தபோது, "பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ள அல்லது பெண் குழந்தைகள் பிறப்பே இல்லாத பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அந்தப் பகுதிகளில் எதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்பதை ஆராய்ந்து வருகிறோம். இது குறித்து ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், ஆஷா -(ASHA) ஊழியர்களுடன் ( கிராம சுகாதார தன்னார்வலர்கள்) ஆலோசனை மேஎற்கொண்டார். பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கங்கோத்ரி எம்.பி. கோபால் ராவத்தும் இருந்தார்.

சமூக சேவகர் கல்பனா தாகூர் கூறும்போது, "இந்த 132 கிராமங்களிலும் 3 மாதங்களாக பெண் குழந்தையே பிறக்கவில்லை என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது பெண் சிசு கொலை நடப்பதை உறுதிப்படுத்துகிறது. பெண் சிசு கொலையைத் தடுக்க அரசாங்கமும் மாவட்ட நிர்வாகமும் எதையும் செய்யவில்லை" என குற்றஞ்சாட்டினார்.

உத்தரகாண்டின் மூத்த பத்திரிகையாளர் ஷிவ் சிங் தன்வால், "உத்தர்காசி மாவட்டத்தில் ஆண் - பெண் பிறப்பு விகிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெகுவாகக் குறைந்துள்ளது. மத்திய அரசு பெண் குழந்தையைக் காப்பாற்றுவோம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்" எனப் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் இந்த செய்தி அம்மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை நடப்பதை தெளிவாக உணர்த்துகிறது. மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x