

தேர்தல் வித்தகர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் தான் சிவசேனா கட்சிக்காக பணியாற்றயிருப்பதாக வெளியான தகவலை சுட்டிக் காட்டி ஊடகங்களை விமர்சித்திருக்கிறார்.
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பிரபல தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுடன் இணைந்து பணியாற்றுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆதித்ய சோப்ராவை அவர் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தயார் செய்து வருவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. அண்மையில் ஆதித்ய சோப்ரா 'ஜன் ஆசீர்வாத் யாத்ரா' என்றொரு பயணத்தை ஒருங்கிணைத்திருந்தார். இது பிரசாந்த் கிஷோரின் அறிவுறுத்தலிலேயே நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இப்போதெல்லாம் ஊடகங்கள் வாயிலாகவே நான் யாருடன் எல்லாம் வேலை செய்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த பிரசாந்த் கிஷோர்?
பிரசாந்த் கிஷோர் ஐ-பேக் (I-PAC Indian Political Action Committee) என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இவர் தேர்தல் கொள்கைகளை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவாறு வகுத்துத் தருகிறார். அண்மையில் ஆந்திரத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிக்கு பிரசாந்தின் பின்புலமும் காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போது மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடனும் அவர் பணியாற்றி வருகிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 42-ல் 18 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிணமூல் கட்சி பிரசாந்தை தங்கள் கட்சிக்காக பணித்துள்ளது. பல்வேறு கட்சிகளுக்கும் தேர்தல் கொள்கைகளை வகுத்துக் கொடுத்துவந்தாலும் தனிப்பட்ட முறையில் பிரசாந்த் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆதரவாளர்.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் அமோக வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த தேர்தல் உத்திகளே காரணம் என்று பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.