

ஸ்ரீஹரிகோட்டா
சந்திரயான்-2 விண்கலம் மார்க்-3 ராக்கெட் மூலம் இன்று பிற்கபல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண் கலத்தை அனுப்பியது. அது நிலவை சுற்றிவந்து 312 நாட்கள் ஆய்வு செய்தது. அப்போது நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.
சந்திரயான் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் ‘சந்திரயான்-2’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் ரூ.604 கோடியில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 15-ம் தேதி திங்கள்கிழமை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு ராக்கெட்டின் இறுதி நிலையான கிரையோஜெனிக் இயந்திரத்தில் ஹீலியம் வாயு கசிவது கண்டறியப்பட்டது. இதை யடுத்து, ராக்கெட்டை ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இன்று விண்ணில் செலுத்தப் படும் சந்திரயான்-2 விண்கலம் ஒருநாள் முன்கூட்டியே செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.