Published : 22 Jul 2019 02:48 PM
Last Updated : 22 Jul 2019 02:48 PM

மதம் சார்ந்த நிறுவனங்களில் விசாகா நெறிமுறைகள்: பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

 

 

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்

மதம் சார்ந்த நிறுவனங்களில் பெண்களைப் பாலியல் துன்புறுத்தலில் இருந்து காக்கும் விசாகா வழிநாட்டுநெறிமுறைகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, பாலியல் தொல்லையில் இருந்து காத்தல் போன்றவற்றுக்காக கடந்த 1997-ம் ஆண்டு விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் 12 வழிநாட்டு நெறிமுறைகளை வகுத்தது. இதன்படி பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த விசாகா கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், வழக்கறிஞர் மணீஷ் பதக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மதவழிபாட்டுத் தலங்கள், மதம் சார்ந்த நிர்வாக இடங்கள் ஆகியவற்றிலும் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அதையும் நாம் வேலை செய்யும் இடமாகவே கருத வேண்டும். மதம் சார்ந்த நிர்வாக இடங்களிலும் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. ஏற்கெனவே பல சம்பவங்கள் நடந்ததற்கான முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

 

ஆஸ்ரமங்கள், மதரஸாக்கள், கத்தோலிக்க தேவாலயங்கள் கீழ் செயல்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. ஆதலால், அங்கு பணியாற்றும் பெண்களை பாலியல் சீண்டல்கள், தொல்லைகளில் இருந்து காக்கும் வகையில் விசாகா கமிட்டியின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், " மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களில் விசாகா வழிகாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் என்று நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது. அதற்கு பதிலாக, ஏன் கிரிமினல் புகார் அளிக்கக் கூடாது? இதுபோன்ற இடங்களுக்கு விசாகா வழிகாட்டு நெறிமுறைகள் எவ்வாறு பொருந்தும்" என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x