சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது: தயார் நிலையில் சந்திராயன் -2
ஸ்ரீஹரிகோட்டா
சந்திரயான்-2 விண்கலம் இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் விண்கலம் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண் கலத்தை அனுப்பியது. அது நிலவை சுற்றிவந்து 312 நாட்கள் ஆய்வு செய்தது. அப்போது நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.
மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் உள்ளிட்ட தாதுக்கள் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதையும் கண்டறிந்து அதற்கான ஆதாரங்களையும் படமாக அனுப்பியது. இந்த திட்டத்துக்கு மிகவும் குறைவாக ரூ.386 கோடி மட்டுமே செலவானதால் உலக நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்தது.
சந்திரயான் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் ‘சந்திரயான்-2’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் ரூ.604 கோடியில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 15-ம் தேதி திங்கள்கிழமை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால், புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு ராக்கெட்டின் இறுதி நிலையான கிரையோஜெனிக் இயந்திரத்தில் ஹீலியம் வாயு கசிவது கண்டறியப்பட்டது. இதை யடுத்து, ராக்கெட்டை ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு, இதுவரை 5 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்தும் தயாராகி, ஏவுதளம் வரை வந்து கவுன்ட்-டவுனும் தொடங்கிய நிலையில் பயணம் நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை.
அதேநேரம், முன்கூட்டியே கோளாறு கண்டறியப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விஞ்ஞானிகள் தீவிரமாக போராடி, ராக்கெட் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்தனர்.
இதையடுத்து, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் 22-ம் தேதி இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.
இந்தநிலையில் சந்திராயன் விண்கலத்தை ஏவுவதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளது. கிரையோ ஜெனிக் இன்ஜினில் திரவ ஆக்ஸிஜனை நிரப்பும் பணியும் முடிந்துள்ளது.
இன்று விண்ணில் செலுத்தப் படும் சந்திரயான்-2 விண்கலம் ஒருநாள் முன்கூட்டியே செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தை சென்றடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
