கர்நாடக அரசியல், கும்பல் வன்முறை: மாநிலங்களவை, மக்களவை நண்பகல் வரை ஒத்திவைப்பு

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளமன்ற முகப்பில் போராட்டம் நடத்திய காட்சி : படம் சந்தீப் சக்சேனா
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளமன்ற முகப்பில் போராட்டம் நடத்திய காட்சி : படம் சந்தீப் சக்சேனா
Updated on
1 min read

புதுடெல்லி, பிடிஐ

கர்நாடக அரசியல் நிலவரம் மற்றும் கும்பல் வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், நண்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை எம்.பியும், ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரருமான ராமச்சந்திர பாஸ்வான் மறைவு காரணமாக  மக்களவை நண்பகல் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை அலுவல் தொடங்கியதும், காங்கிரஸ் எம்.பி.க்கள் விதி 267-ன்கீழ் நோட்டீஸ் அளித்து இன்று அவை அலுவல்களை ஒத்திவைத்து, கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார்கள்.

இதேபோன்ற நோட்டீஸ் திரிணமூலம் காங்கிரஸ் எம்பி.க்களும் அளித்து உ.பி.யிலி் சோன்பத்ரா வன்முறை, பிஹார் கும்பல் வன்முறை ஆகியவை  தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், அதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மறுத்துவிட்டார்.

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தபின், வழக்கம்போல் அவையின் அலுவல்கள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ், திரிணமூலம் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு, " கர்நாடக அரசியல் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அவையில் அதுகுறித்து விவாதிக்க முடியாது. தயவு செய்து அமருங்கள், கேள்வி நேரத்துக்குபிந்தைய நேரத்தில் உங்களுக்கு பேசுவதற்கு அனுமதி வழங்குகிறேன் " என்றார்.

ஆனால், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டு அமளி செய்தனர். இதனால் அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார். மீண்டும் அவை கூடியபோதும் இதேபோன்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை கூடியதும், மறைந்த எம்.பி. ராமச்சந்திர பாஸ்வானுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித், ராமச்சந்திர பாஸ்வான் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசினார். அதன்பின் அவை நண்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கும் என மக்களவைத் தலைவர் தெரிவித்தார்.

ஆனால், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, எம்.பி. ஒருவர் திடீரென மறைந்துவிட்டால், அன்று அலுவல்கள் ரத்து செய்து ஒத்திவைப்பதுவழக்கம். இந்த பாரம்பரிய நடைமுறையை மீறக்கூடாது என்று வலியுறுத்தினார். ஆனால், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மறுத்துவிட்டு, நண்பகல் 2 மணிவரை மட்டுமே ஒத்திவைக்கப்படும் என்று கூறியதால், காங்கிரஸ் எம்பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in