

காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லாவை 'அரசியல் கத்துக்குட்டி' என விமர்சித்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "ஒமர் அப்துல்லா ஓர் அரசியல் கத்துக்குட்டி. எதற்கெடுத்தாலும் ட்வீட் செய்பவர். அவருடைய ட்வீட் பதிவுகளையும் அதன் கீழ் வரும் பின்னூட்டங்களையும் கவனியுங்கள் நீங்களே அதைப் புரிந்துகொள்வீர்கள். காஷ்மீர் தெருக்களில் இறங்கி ஒமரைப் பற்றிக் விசாரித்துப் பாருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அவர், "ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை ஏன் கொல்லுகிறார்கள், மாநிலத்தை சூறையாடிய ஊழல் செய்த அரசியல்வாதிகளை கொல்ல வேண்டியது தானே" எனப் பேசி கடும் கண்டனங்களைப் பெற்றார்.
இதற்கு பதிலளித்த ஒமர் அப்துல்லா, "காஷ்மீரில் இனிமேல் அரசியல்வாதி அல்லது அதிகாரிகள் கொல்லப்பட்டால் அது ஆளுநரின் உத்தரவாக தான் இருக்கும். என்னுடைய இந்த ட்வீட்டை சேமித்து வைத்துக் கொல்லுங்கள்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் ஏஎன்ஐ பேட்டியில் ஒமர் அப்துல்லாவை 'அரசியல் கத்துக்குட்டி' என ஆளுநர் விமர்சித்திருக்கிறார்.
வருத்தம் தெரிவித்த ஆளுநர்:
இதற்கிடையில், ஊழல் அரசியல்வாதிகளைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள சத்யபால், "ஓர் ஆளுநராக இந்தக் கருத்தை நான் தெரிவித்திருக்கக் கூடாது. மலிந்துவரும் ஊழல் ஏற்படுத்திய அழுத்தத்தால் அவ்வாறு சொல்லிவிட்டேன்.
ஒருவேளை நான் இத்தகைய அரசியல் சாசன பொறுப்பில் இல்லாவிட்டால் நான் சொன்ன கருத்தில் பிடிவாதமாக நின்றிருப்பேன். அதற்கான விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருந்திருப்பேன்.
ஆனால், ஆளுநர் பொறுப்பிலிருந்து கொண்டு அத்தகைய கருத்தை நான் தெரிவிருத்திருக்கக் கூடாது" எனக் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.