

கோட்டயம், பிடிஐ
கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள், 3 எம்எல்ஏக்கள் விரைவில் பாஜகவில் இணைவதற்கான பேச்சில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தகவலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கேரளா ஜனபக்ஸம் மதச்சார்பற்ற கட்சியின் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் உறுதி செய்துள்ளார்.
பி.சி.ஜார்ஜ் பூஞ்சார் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார்.
கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 19 இடங்களில் வென்றது.
பல்வேறு மாநிலங்களில் நிலவும் அரசியல் குழப்பங்களால் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கல் மத்தியில் ஆளும்பாஜகவுக்கு கட்சி மாறுவது அதிகரித்து வருகிறது.
கோவா, கர்நாடகா, ஆந்திர ஆகியவற்றில் சமீபத்தில் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பாஜகவுக்கு அணி மாறினார்கள். ஆனால், கேரள மாநிலத்தில் பாஜகவுக்கு இன்னும் எம்எல்ஏ, எம்.பி.க்கள் இல்லாதநிலையில், காங்கிரஸ் எம்.எல்ஏ.க்கள், எம்பி.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
இதுகுறித்து கேரளா ஜனபக்ஸம் மதச்சார்பற்ற கட்சியின் எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் நேற்று கோட்டயத்தில் நிருபர்களிடம் கூறுகையில், " எனக்கு கிடைத்த தகவலின்படி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் 6 பேர், எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜக தலைமையிடம் பேசி வருகிறார்கள். அவர்கள் விரைவில் பாஜகவில் இணையலாம். ஆனால், இவர்கள் யார் என்பது குறித்த அடையாளங்களை என்னால் இப்போது தெரிவிக்க முடியாது. அவர்கள் இணையும்போது யார் என்பது உங்களுக்குத் தெரியும். என்னுடைய கூற்று சரியானது என்பது விரைவில் நிரூபிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
பி.சி.ஜார்ஜ் இதற்கு முன் மாணி காங்கிரஸ் கட்சியில் இணைந்து இருந்தார். ஆனால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து விலகி பூஞ்சார் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்றார். அதன்பின் கேரளா ஜனபக்ஸம் மதச்சார்பற்ற கட்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜார்ஜ் இணைந்தார்.
மூத்த எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் பேச்சுக்கு மாநில காங்கிரஸ் கட்சி கண்டனமும் மறுப்பும் தெரிவித்துள்ளது. கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பி.டி.சதீஸன் கூறுகையில் "பி.சி.ஜார்ஜ் ஊடகத்தின் கவனத்தை கவரும் வகையில் அடிக்கடி இதுபோன்று கருத்துக்களை கூறுவது வழக்கம். ஜார்ஜ் பேசுவதை கேரள அரசியலில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கேரள காங்கிரஸில் இருந்து ஒரு தலைவர் கூட பாஜகவில் சேரமாட்டார்கள் என்பதை நம்பிக்கையுடன் கூறுகிறேன் " எனத் தெரிவித்தார்