

காந்தி குடும்பத்தைச் சேராதவரை கட்சித் தலைமைப் பதவியில் அமரவைத்தால் காங்கிரஸ் 24 மணி நேரத்தில் இரண்டாக உடைந்துவிடும் என முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றார். தென்னிந்தியாவில் ராகுல் தனது அடையாளத்தை நிலைப்படுத்திக் கொண்டதன் சாட்சியாகவே இது பார்க்கப்படுகிறது. ஆனாலும், தனது சொந்த தொகுதியான அமேதியை ஸ்மிருதி இரானியிடம் நழுவவிட்டார். காங்கிரஸ் கட்சியும் மோசமான தோல்வியை சந்தித்தது. 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது 2014 மக்களவைத் தேர்தலைவிட வெறும் 8 தொகுதிகள் அதிகம். இதனையடுத்து கடந்த மே 25-ம் தேதி ராகுல் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது ட்விட்டர் ஹேண்டிலில் இருந்து காங்கிரஸ் தலைவர் என்ற பதவியையும் நீக்கினார். 4 பக்கங்களுக்கு ராஜினாமா கடிதத்தையும் வெளியிட்டார். அதன் பின்னர் இப்போதுவரை இந்தியாவின் மிகப் பெரிய கட்சி தலைவர் இல்லாமல் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள தலைவர் பதவிக்கு தகுதியான நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமை பொறுப்பில் காந்தி குடும்பத்தைச் சாராதவரை நியமித்தால் அது கட்சி பிளவுக்குக் காரணமாக அமையும் என முன்னாள் வெளியுறவு அமைச்சருமான நட்வர் சிங் கூறியிருக்கிறார்.
நட்வர் சிங் கூறியதாவது:
134 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி தலைமை இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. கட்சித் தலைமைப் பதவிக்கு காந்தி குடும்பத்தைச் சாராதவர் யாரும் தேர்வு செய்யப்படக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.
பிரியங்கா காந்தியைக்கூட காங்கிரஸ் தலைவராக நியமிக்கலாம். அண்மையில் சோன்பத்ரா வன்முறை விவகாரத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தை எல்லோரும் கவனித்திருப்பார்கள். மிக அற்புதமாக அவர் செயல்பட்டார். விடாப்பிடியாக அங்கேயே தங்கி அவர் நினைத்ததை சாதித்தார்.
ஆனால், தனது சகோதரரே காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தலைமை பொறுப்பில் இருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளதால் பிரியங்கா கையிலேயே அந்த முடிவு இருக்கிறது. தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தினர் இல்லை என்ற நிலைப்பாட்டிலிருந்து ராகுல் காந்தி பின்வாங்க வேண்டும். காந்தி குடும்பத்தை அல்லாது வேறு ஒருவரின் தலைமையில் காங்கிரஸ் கட்சி 24 மணி நேரத்துக்குள் உடைந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
முன்னதாக முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும். அவர் 100% எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவர். வேறு யாரையாவது தலைமை பதவியில் அமரவைத்தால் கட்சி நிச்சயமாக சிதைத்துவிடும்" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தறோது முன்னாள் வெளியுறவு அமைச்சரான நட்வர் சிங்கும் அதே தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவி சர்ச்சையில் ராகுல் காந்தி தொடர்ந்து பிடிவாதம் காட்டிவரும் நிலையில், பிரியங்கா காந்திக்கு ஆதரவு பெருகிவருகிறது.