

பொதுமக்களைச் சுரண்டி செல்வம் சேர்த்த அரசியல் தலைவர்களைக் கொல்ல வேண்டியதுதானே, எதற்காக அப்பாவி பொதுமக்களைக் கொல்கிறீர்கள் என்று காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பேசியது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
கார்கிலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யபால் மாலிக், “துப்பாக்கித் தூக்கியவர்கள் தங்கள் சொந்த மக்களையே கொல்கின்றனர். அவர்கள் பாதுகாப்புப் படையினரைக் கொல்கின்றனர். ஏன் இவர்களைக் கொல்கிறீர்கள்? காஷ்மீர் வளங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொல்லுங்கள், அவர்களில் யாரையாவது இதுவரை கொன்றிருக்கிறீர்களா?” என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.
காஷ்மீரை ஆண்ட அரசியல் குடும்பங்கள் பெரிய அளவில் சொத்துக்களை குவித்துள்ளன, பயங்கரவாதம் ஏன் அவர்கள் மீது பாயவில்லை என்று கேட்கிறார் சத்யபால் மாலிக். “இந்திய அரசு ஒருக்காலும் துப்பாக்கிக்கு அடிபணியாது” என்றார்.
“காஷ்மீரை ஆண்ட பெரிய குடும்பங்கள் வரம்பற்ற செல்வ வளங்களை சேர்த்துக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஸ்ரீநகரில் ஒருவீடும், டெல்லியில் ஒரு வீடும் துபாயில் ஒருவீடும் லண்டனில் வீடு என்றும் சொத்துக்களை குவித்தனர். பெரிய பெரிய ஹோட்டல்களில் இவர்கள் பங்குதாரர்கள்” என்று பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓமர் அப்துல்லா, “இந்த ட்வீட்டை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இனி காஷ்மீரில் மைய நீரோட்ட அரசியல் வாதிகள் யாராவது கொல்லப்பட்டால் அது கவர்னரின் உத்தரவினாலேயே இருக்கும். ஒரு அரசியல் சாசன பதவியில் இருக்கும் கவர்னர் போன்றவர் தீவிரவாதிகள் அரசியல் வாதிகளை கொல்ல வேண்டும் என்கிறார், இவரைப்போன்றவர்களுக்குத்தான் டெல்லியில் செல்வாக்கு பெருகி வருகிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.