Published : 22 Jul 2019 07:27 AM
Last Updated : 22 Jul 2019 07:27 AM

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது: ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் இன்று மதியம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 20 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண் கலத்தை அனுப்பியது. அது நிலவை சுற்றிவந்து 312 நாட்கள் ஆய்வு செய்தது. அப்போது நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதை உறுதிப்படுத்தியது. மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் உள்ளிட்ட தாதுக்கள் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதையும் கண்டறிந்து அதற் கான ஆதாரங்களையும் படமாக அனுப்பியது. இந்த திட்டத்துக்கு மிகவும் குறைவாக ரூ.386 கோடி மட்டுமே செலவானதால் உலக நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்தது.

சந்திரயான் திட்டத்தின் வெற்றி யைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் ‘சந்திரயான்-2’ திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக அதிநவீன வசதிகளுடன் ரூ.604 கோடியில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 15-ம் தேதி திங்கள்கிழமை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதற்கான கவுன்ட்-டவுன் தொடங் கப்பட்டு ராக்கெட்டை ஏவுவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருந்தன. ஆனால், புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு ராக்கெட்டின் இறுதி நிலையான கிரையோஜெனிக் இயந்திரத்தில் ஹீலியம் வாயு கசிவது கண்டறியப்பட்டது. இதை யடுத்து, ராக்கெட்டை ஏவும் திட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப் பட்டு, இதுவரை 5 முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்தும் தயாராகி, ஏவுதளம் வரை வந்து கவுன்ட்-டவுனும் தொடங்கிய நிலையில் பயணம் நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை.

அதேநேரம், முன்கூட்டியே கோளாறு கண்டறியப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க் கப்பட்டது. விஞ்ஞானிகள் தீவிரமாக போராடி, ராக்கெட் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்தனர். இதையடுத்து, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் 22-ம் தேதி திங்கள்கிழமை (இன்று) மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித் தது. இதற்கான 20 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சந்திரயான்-2 விண்கலம் 3,850 கிலோ எடை கொண்டது. இதில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற 3 அதிநவீன சாதனங்கள் உள்ளன. சந்திரயான்-2 விண் கலத்தின் சுற்றுப்பாதையை மாற்ற ஆர்பிட்டர் உதவி செய்யும். நிலவில் விண்கலம் தரையிறங்க ‘விக்ரம்’ என்ற லேண்டர் கருவி உதவியாக இருக்கும். ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் நிலவின் மேற்பகுதியை ஆய்வு செய்யும்.

சந்திரயான்-2 விண்கலத்தில் மொத்தம் 14 வகையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நிலவைச் சென்றடைந்ததும், தனித்தனியாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். விண்கலத்தில் உள்ள முப்பரிமாண கேமராக்கள் தொடர்ந்து படங்களை எடுத்து அனுப்பும்.

இன்று விண்ணில் செலுத்தப் படும் சந்திரயான்-2 விண்கலம் 48 நாள் பயணத்துக்குப் பிறகு, செப்டம்பர் 7 அல்லது 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும். இத்திட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தை சென்றடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

சந்திரயான்-2 திட்டத்தின் இயக் குநர்களாக வனிதா முத்தையா, ரீத்து கரிதால் ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் இடம்பெற்றிருப் பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ தலைவர் தகவல்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று கூறியதாவது:

திட்டமிட்டபடி, 22-ம் தேதி மதியம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தொழில்நுட்பக் கோளாறு அனைத்தும் சரிசெய்யப்பட்டு, பல்வேறு கட்ட சோதனைகளும் நல்லபடியாக நடத்தப்பட்டுள்ளன. இனி எந்தக் கோளாறும் ஏற்பட வாய்ப்பு இல்லை. விண்ணில் செலுத்தப்பட்ட 48 நாட்களில், 15 அபாய கட்டங்களை கடந்து, இதுவரை யாரும் செல்லாத நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்-2 மிகவும் மெதுவாக தரையிறங்கும். இதன்மூலம் பல்வேறு முன்னோடி அறிவியல் சோதனைகள் நடத்தப்பட உள்ள தால் இந்தியா மட்டுமின்றி உலகமே சந்திரயான்-2 விண்கலத்தின் பயணத்தை ஆவலோடு எதிர்பார்த் திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x