Published : 21 Jul 2019 05:53 PM
Last Updated : 21 Jul 2019 05:53 PM

நாளை குமாரசாமி அரசுக்கு கடைசிநாள்: எடியூரப்பா நம்பிக்கை

 

பெங்களூரு, பிடிஐ

கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசு கவிழும், நாளைதான் குமாராசாமி தலைமையிலான அரசுக்கு கடைசி நாள் என்று முன்னாள் முதல்வரும், மாநில பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் ஆளும், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனிடையே,  2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று,  அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்

 

ராஜிநாமா செய்திருந்த எம்எல்ஏக்களில் 12 பேர், மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இவர்களைச் சமாதானப்படுத்தி மீண்டும் பெங்களூருக்கு அழைத்து வர அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார் செய்த முயற்சி தோல்வி அடைந்தது

எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்த முன்னாள் முதல்வர் சித்தராமையா நேரடியாக மேற்கொண்ட முயற்சியும் பயனளிக்கவில்லை

தங்கள் ராஜிநாமா முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள்.

முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 2 நாள்களாக விவாதம் நடந்தது. ஆளுநர் வஜுபாய் வாலா வெள்ளிக்கிழமையை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இருமுறை கூறியும் அதை சபாநாயகர் ரமேஷ் குமார் கருத்தில் கொள்ளவில்லை.

  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நாளை (22-ஆம் தேதி) கர்நாடக சட்டப்பேரைவயில் நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்தப்பட உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்கள் தேவை எனும் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் குமாரசாமி அரசு கவிழ்வது உறுதியாகி உள்ளது.

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் இன்று பெங்களூரில் கூறுகையில், "  காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, சபாநாயகர், குமாரசாமி ஆகியோர் திங்கள்கிழமை(நாளை) பெரும்பான்மையை நிருபிப்போம் எனத் தெரிவித்துள்ளார்கள். நான் 100 சதவீதம் நம்பிக்கையுடன் சொல்கிறேன், நாளை குமாரசாமி அரசு முடிவுக்கு வந்துவிடும். நாளைதான் குமாரசாமி அரசுக்கு கடைசிநாள்.

காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அமைத்த நாளில் இருந்தே சிக்கல் கட்சிக்குள் இருந்து வருகிறது. ஆட்சி எப்படியாகினும் கவிழும் நிலையில், தேவையில்லாமல் அவகாசத்தைப் பெற்றுக்கொண்டு காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

மும்பையில் தங்கி இருக்கும் 15 எம்எல்ஏக்களை வாக்களிக்கக் கூறி கட்டாயப்படுத்தக் கூடாது உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது. அந்த கூட்டத்துக்குள் வருவதும், பங்கேற்காமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம் எனக் கூறி இருக்கிறது.

மேலும், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் எந்தவிதமான கொள்கை முடிவுகளும், பெரிய முடிவுகளும் எடுக்கக் கூடாது என்று முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். அவ்வாறு ஏதேனும் முக்கியமான முடிவுகள் ஏதேனும் எடுத்தால், அது ஜனநாயக முறைக்கு விரோதமானதாகும் " எனத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x