நிலத்தகராறில் 10 பேர் சுட்டுக்கொன்றதன் பின்னணியில் அரசியல் சதி; காங்கிரஸே காரணம்: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு

நிலத்தகராறில் 10 பேர் சுட்டுக்கொன்றதன் பின்னணியில் அரசியல் சதி; காங்கிரஸே காரணம்: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

லக்னோ

உத்தர பிரதேசத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத் தகராறில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது கிராமத் தலைவரும் அவரது உறவினர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நேற்றுமுன்தினம் இரவு முதல் அங்கே தங்கியிருந்தார்.

நேற்ற விருந்தினர் மாளிகைக்கு வந்த  பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 3 பேரை பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்தநிலையில் பிரியங்கா காந்தியின் செயல்பாடுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார். சோன்பத்ராவில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை அவர் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 18.50 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அவர் அறிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

சோன்பத்ரா மாவட்டத்தில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்து அரசியல் செய்ய காங்கிரஸ் முயலுகிறது.

இதன் பின்னணியில் அரசியல் சதி உள்ளது. இந்த சம்பவத்தை வைத்து சிலர் முதலை கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களின் நோக்கத்தை மக்கள் முன்பு வெளிப்படுத்துவோம். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in