பாஜகவில் சேர திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு சிபிஐ மூலம் மிரட்டல்: மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
கொல்கத்தாவில் நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

கொல்கத்தா, ஐஏஎன்எஸ்

பாஜகவில் சேரக் கூறி திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு மத்திய நிறுவனங்களான சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை ஆகியவை மிரட்டல் விடுக்கின்றன என்று மத்திய அரசு மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த 1993-ம் ஆண்டு, மேயோ சாலையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் நினைவாக, இன்று தியாகிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கொல்கத்தாவில் உள்ள தரம்தலாவில் மிகப்பெரிய பேரணி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் பாஜக ஏமாற்றித்தான் வெற்றி பெற்றுள்ளது. மின்னணு வாக்கு எந்திரங்கள், சிஆர்பிஎப் போலீஸார், தேர்தல் ஆணையம் ஆகியோரை கைவசம் வைத்து ஏமாற்றி தேர்தலில் பாஜக வென்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 18 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் திரிணமூல் காங்கிரஸ் அலுவலகங்களை கைப்பற்ற முயல்கிறார்கள், தொண்டர்களை தாக்குகிறார்கள்.

நாடாளுமன்றம் அமைதியாகவும், சுமூகமாகவும் செல்வதற்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம், ஆளும் கட்சி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேற்குவங்கத்தில் அடுத்து நடக்க இருக்கும் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுகிறேன்.

கறுப்புப் பண விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட கறுப்புபணத்தை மக்களிடம் கொடுங்கள் என்று வலியுறுத்தி வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இதற்காக தொண்டர்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து  பாஜக அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த தயாராக வேண்டும்.

நம்முடைய அரசின் நலத் திட்டங்களால் மக்கள் ஏமாற்றமடைந்து விடக்கூடாது என்று நான் கட்சித் தொண்டர்களுக்கு  எச்சரிக்கையாக கூறுகிறேன். மக்களுக்கு எந்தவிதமான ஏமாற்றங்களும் இல்லாமல் நலத்திட்டங்களை வழங்கவேண்டியது கடமையாகும். ஆனால், திரிணமூலம் காங்கிரஸ் தலைவர்கள் திட்டங்களுக்கு பெற்ற கமிஷன் தொகையை திருப்பிக்கொடுக்கக் கோரி பாஜக குண்டர்கள் கேட்கிறார்கள்.

நான் கேட்கிறேன், மீட்கப்பட்ட கறுப்புப்பணத்தை முதலில் எங்களிடம் திருப்பிக்கொடுங்கள். தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான பணத்தை பாஜக செலவு செய்தது. இந்த செலவுகளுக்கு எல்லாம் பணம் எங்கிருந்து வந்தது. டெல்லியில் உள்ள பாஜக கட்சி அலுவலகம், நட்சத்திர சொகுசு ஓட்டல் போன்று இருக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாங்கி இருக்கிறார்கள்.

கறுப்புப் பணத்தை, மக்களிடம் திருப்பி கொடுக்க வலியுறுத்தி வரும் 26,27-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பாஜக அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும்.

சிட்பண்ட் மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திரிணமூலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை பாஜகவில் சேரக்கூறியும் இல்லாவிட்டால் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் மத்திய அரசின் நிறுவனங்களான சிபிஐ, வருமானவரித்துறை போன்றவை மிரட்டல் விடுத்து வருகின்றன.

ரூ. 2 கோடி பணமும், ஒரு பெட்ரோல் பங்க்கும் தருவதாக எம்எல்ஏக்களிடம் பாஜகவினர் பேரம் பேசி வருகிறார்கள். கர்நாடகத்தில் மட்டுமல்ல இங்கும் குதிரைபேரத்தில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

இப்போது செயல்படும் விதத்தை பார்த்தால், மத்தியில் ஆளும் பாஜக அரசு 2 ஆண்டுகளுக்கு மேல் இருக்காது.

இவ்வாறு மம்தா பானர்ஜி  பேசினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in