''வெள்ளத்தில் மூழ்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால் அனைவரும் ஒன்றாகவே இறப்போம்'' - பிஹார் கிராமத்தின் அபயக் குரல்

பிஹார் மாநிலத்தில் இடைவிடாது பெய்துவரும் மழையால் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டள்ளனர்.
பிஹார் மாநிலத்தில் இடைவிடாது பெய்துவரும் மழையால் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டள்ளனர்.
Updated on
1 min read

பிஹாரில் இடைவிடாது பெய்துவரும் மழையினால் பெருக்கெடுத்துவரும் வெள்ளம் தொடர்ந்து அழிவை ஏற்படுத்திவரும் நிலையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சரியான மீட்பு நிவாரண உதவிகள் கிடைக்காத, சென்றடையாத நிலையில் கிராமங்கள் தத்தளித்து வருகின்றன.

தாதியா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெள்ளம் சூழ்துள்ள நிலையில் தங்கள் கால்நடைகளுடன் ஒரே இடத்தில் கூடியுள்ளனர். தாதியா கிராமத்திற்குள் வெள்ளம் நுழைந்ததால் வெளியேற முடியாத நிலையில் துன்பகாலங்களிலும் அவ்வூர் மக்கள் ஒன்றாகக் கூடியுள்ளது முன்மாதிரியான ஒற்றுமையை வெளிக்காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது; எனினும் இச்சம்பவம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு குறித்து மாநில நிர்வாகத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுகுறித்து தாதியா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ''நாங்கள் இறந்தால், நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இறந்துவிடுவோம் என்று நினைத்தோம். எங்கள் கால்நடைகளை புடவைகளால் உருவாக்கப்பட்ட கொட்டகையில் தங்க வைத்திருக்கிறோம். இங்கே நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. எங்களில் பலர் வீடுகளை இழந்துவிட்டோம், சாப்பிட உணவும் இல்லை, கால்நடைகளுக்கு தீவனமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் அரசாங்க உதவிக்காக காத்திருக்கிறோம்.'' என்றார். 

இதே கிராமத்தைச் சேர்ந்த இன்னும் சிலர், ''நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு இன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை, வெள்ள அபாயத்தைக் குறைக்க எங்களால் முடிந்தவரை முயன்று பார்த்தோம். ஆனால் கிராமத்தைச் சுற்றி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முயற்சிகள் அனைத்தும் வீணானது'' என்றனர்.

தாதியாவைச் சேர்ந்த இன்னொரு கிராமவாசி, ''அரசாங்கத்தின் எந்த அதிகாரியும் எங்களை சந்திக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. எங்களிடம் குடிக்கவும் தண்ணீர் இல்லை. நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவ இங்கு கூடினோம். எங்கள் ரேஷன்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் தளவாடங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன'' என்று கூறினார்.

இக்கிராமத்தின் அருகிலுள்ள கிராம மக்கள் இதுகுறித்து பேசுகையில், ''இப்பகுதியில் வெள்ளத்தினால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ஒருவர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லக்கூடிய வகையில் சரியான சாலைகளை அமைக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்'' என்றனர்.

மழைவெள்ளத்தினால் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 26 லட்சம் பேர் பேரழிவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் மாநில அரசு நேரடியாக ரூ .6,000 வழங்கி வருவதாகவும மாநில அரசின் செய்திப் பிரிவு தெரிவிக்கிறது. பிஹாரில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவிகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in