

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை திரும்பவும் கொண்டுவரவேண்டும் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.தேர்தல்களுக்கு மாநில நிதியுதவியும் அவர் கோரியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:
தேர்தலில் மின்னணு இயந்திரத்திற்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையே சிறந்தது. ஈ.வி.எம்கள் முன்னர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அந்நாடுகள் இப்போது வாக்களிக்க இயந்திரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன என்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே மீண்டும்
ஏன் வாக்குச் சீட்டுகளை இங்கு கொண்டு வர முடியாது?
இத்தகைய சீர்திருத்தங்களில் மாநில நிதி அவசியம், தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்துகின்றன. சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
தேர்தலில் செலவிடப்பட்டுள்ளவை ஆயிரக்கணக்கான கோடி என்று சிலர் கூறுகிறார்கள். நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், இவ்வளவு பணம் எங்கிருந்துவந்தது? ஒவ்வொரு கட்சியும் இவ்வளவு பணத்தை செலவிட முடியாது.
இது ஊழல். பணம் வெவ்வேறு போலி வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது. வங்கி மூலம் விரைவு பணப்பரிமாற்ற (ஆர்டிஜிஎஸ்) முறையைப் பயன்படுத்தி இத்தொகைகள் கைமாற்றப்பட்டுள்ளன.
1995 முதல், நான் தேர்தல் சீர்திருத்தங்களை கோரி வருகிறேன். தேர்தல்களில் கறுப்புப் பணத்தை பயன்படுத்துவதை நிறுத்தவும், ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியல் கட்சிகள் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தவும் விரும்பினால், நீங்கள் தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கிச் செல்ல வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசினார்.