Published : 21 Jul 2019 11:40 AM
Last Updated : 21 Jul 2019 11:40 AM

கொழிக்கும் தனியார் காப்பீடு நிறுவனங்கள்: ரூ.46 கோடி பிரீமியம் செலுத்திய ரயில்வே: ரூ.7 கோடி மட்டுமே பயணிகளுக்கு இழப்பீடு

 

 

புதுடெல்லி, பிடிஐ

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.46 கோடி பிரீமியம் தொகையை ரயில்வே துறையிடம் இருந்து பெற்றுள்ள தனியார் காப்பீடு நிறுவனங்கள், பயணிகளுக்கு இழப்பீடாக ரூ.7 கோடி மட்டுமே வழங்கியுள்ளன என்று தெரிய வந்துள்ளது.

 

இதனால், ஏறக்குறைய ரூ.39 கோடி தொகை தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரம் வெளியாகியுள்ளது.

 

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த தகவலைப் பெற்று வெளியிட்டுள்ளார்

 

மத்திய ரயில்வே துறையின் கீழ் ஐஆர்சிடிசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஐஆர்சிடிசி நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் ஆன்-லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ரயில்வே துறை காப்பீடு வழங்குகிறது.

 

இந்த காப்பீட்டை ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ், ஐசிஐசிஐ லாம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய 3 தனியார் நிறுவனங்கள் அளித்து வருகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயணிகள் காப்பீடு திட்டத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து "ஆர்ஏசி" அல்லது டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணி ஒருவருக்கு அவரின் டிக்கெட் கட்டணத்தில் கூடுதலாக காப்பீடுக்காக 92 காசுகள் விருப்பத்தின் அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது.

 

இந்த திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து ரயிலில் பயணிக்கும் ஒரு பயணி அல்லது குடும்பத்தினர் ரயில் விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

 

இதன்படி, ரயில் விபத்தில் சிக்கி காப்பீடு செய்த பயணி இறக்க நேரிட்டால், அவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்தை காப்பீடு நிறுவனங்கள் வழங்கும். காப்பீடு திட்டத்தில் சேர்ந்த ஒரு பயணி ரயில் விபத்தில் சிக்கி காயம் மிகப்பெரிய காயம் அடைந்தாலோ அல்லது நிரந்தர உறுப்பு இழப்பு ஏற்பட்டாலோ ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்தில் காயம் அடைந்த பயணிக்கு ரூ.2 லட்சம் மருத்துவச் செலவுக்கு வழங்கப்படும்.

 

இதுமட்டுமல்லாமல் ரயிலில் நடக்கும் கொள்ளை, வன்முறை, தீ விபத்துகள் போன்றவற்றில் பாதிக்கப்படும் பயணிக்கும் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடு வழங்கப்படுகிறது.

 

அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு ரூ.38.89 கோடியை ரயில்வே துறை பிரீமீயமாக செலுத்தியுள்ளது. அதேசமயம், இழப்பீடாக பயணிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7.29 கோடி மட்டும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் வழங்கியுள்ளன என்று தகவல் அறியும் மனு மூலம் தெரியவந்துள்ளது.

 

கடந்த 2 ஆண்டுகளில் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு இழப்பீடு கோரி 206 கோரிக்கைகள் வந்தநிலையில், அதில் 72 கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், " கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வே துறையில் விபத்துக்குள் கனிசமாக குறைந்துவிட்டன. கடந்த 2013-14ம் ஆண்டில் 118 ரயில் விபத்துக்கள் நடந்த நிலையில், 2016-17-ம் ஆண்டில் 104 ஆகவும், 2017-18-ம் ஆண்டில் 73 விபத்துக்களாகவும், 2018-19-ம் ஆண்டில் 59 ஆகவும் குறைந்துவிட்டது இதனால் விபத்துக்கள் குறைந்ததால், இழப்பீடு வழங்கும் அளவும் குறைந்துவிட்டது" எனத் தெரிவித்தனர்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x