

இமயமலைப் பகுதியில் மோச மான வானிலை நிலவியதால் ஒரு நாள் தடைபட்ட அமர்நாத் யாத்திரை அடிவார முகாமிலிருந்து நேற்று மீண்டும் தொடங்கியது.
இதுதொடர்பாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது:
தெற்கு காஷ்மீரில் இமய மலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது. இதை தரிசிப்பதற்கான இந்த ஆண்டுக்கான 59 நாள் புனித யாத்திரை கடந்த 2-ம் தேதி தொடங்கியது. ஆனால் கடும் மழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன் தினம் பயணம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வானிலை மேம்பட்டதையடுத்து, சுமார் 16,500 பயணிகள் நுன்வான் மற்றும் பல்தாலில் உள்ள அடிவார முகாம் களிலிருந்து நேற்று பயணத்தை தொடங்க அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 8,981 பயணிகள் நுன்வான் முகாமிலிருந்து அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் குகை வழியாக அமைந்துள்ள 45 கி.மீ. நீள பாதையில் செல்லவும், 7,862 பயணிகள் கன்டர்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள 16 கி.மீ. நீள குறுகிய பாதை வழியாக பல்தால் முகாமிலிருந்து குகைக் கோயிலுக்குச் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் கடும் மழை பெய்த போதிலும் 10,378 யாத்ரீகர்கள் குகைக் கோயிலில் சாமி தரிசனம் செய்தநர். நேற்று பகல் 1 மணி வரையில் 9,182 பயணிகள் வழிபட்டனர். இது வரையில் 1.41 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.
உத்தராகண்டில் நிலச்சரிவு
உத்தராகண்டில் பலத்த மழை பெய்து வருவதால் உத்தராகாசி-கங்கோத்ரி வழித்தடத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ஹேமகுந்த் சாஹிப் கேதார்நாத் ஆகிய கோயில்களுக்கான யாத்திரை தடைபட்டது.
கடந்த மாதமும் மழை காரணமாக யாத்திரை தடைபட்டு பக்தர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.