Published : 20 Jul 2019 03:22 PM
Last Updated : 20 Jul 2019 03:22 PM

பிரியங்காவை ''சிறைப்படுத்தியதன்மூலம்'' ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்துள்ளது பாஜக அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சோன்பத்ரா படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்திக்கச்சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுஎந்தவித அடிப்படை வசதியுமற்ற சூனார் விருந்தினர் இல்லத்தில் சிறைப் படுத்தியிருப்பதன்மூலம் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்திருக்கிறது உத்திரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு என்று ராகுல் காந்தி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

உபியில் பழங்குடிகளின் நிலத்தை கையகப்படுத்துவதற்காக சோனாபத்ராவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கடும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் படுகாயமுற்றனர். காயமடைந்தவர்கள் வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களை நேற்று காலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்றபோது வாரணாசி அருகேயுள்ள நாராயண்பூரிலேயே பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டார். 

நேற்றிரவு சூனார் விருந்தினர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு ஒருநாள் கடந்த நிலையில் உத்தரப் பிரதேச பாஜக அரசின் கைது நடவடிக்கையை ராகுல் காந்தி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

சோன்பத்ரா படுகொலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச்சென்ற காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு சிறைபடுத்தப்பட்டுள்ளார். 

சூனார் விருந்தினர் இல்லத்தில் தண்ணீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் நிறுத்தப்பட்டு, அங்கு சிறைப்படுத்தியிருப்பதன்மூலம் ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்துள்ளது உத்திரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு. 

எனினும், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்காக போராடுவதை காங்கிரஸ் நிறுத்தப் போவதில்லை. இத்தகைய சில தந்திரங்களுக்கெல்லாம் காங்கிரஸ் பயப்படாது. 

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

உபியின் காட்டாட்சி

முன்னதாக, சோன்பத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க பிரியங்கா அனுமதி மறுக்கப்பட்டதை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு கட்சி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை "நாடு கடத்த" விரும்புவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஒரு ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

உத்தரப் பிரதேசத்தில் "காட்டாட்சி" நிலவுகிறது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறிவிட்டது. சோன்பத்ரா படுகொலையைத் தடுக்க பாஜக அரசு தவறிவிட்டது. குற்றவாளிகளுக்கு எதிராக செயல்படவும் பாஜக அரசு தவறிவிட்டது.

பாஜக அரசு சூனார் விருந்தினர் மாளிகையின் மின்சாரம் / தண்ணீரை வெட்டுகிறது. பாஜக அரசு இப்போது பிரியங்காவை உ.பி.யில் இருந்து நாடு கடத்த விரும்புகிறது. காட்டாட்சி! " 

என்று தனது ட்விட்டர் பதிவில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x