Published : 20 Jul 2019 02:48 PM
Last Updated : 20 Jul 2019 02:48 PM

சோன்பத்ரா நிலத் தகராறில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் உறவினர்களை சந்தித்தார் பிரியங்கா 

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத் தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட பழங்குடியின விவசாயிகளின் உறவினர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்தார்.

உ.பி.யில் நிலத் தகராறில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது கிராமத் தலைவரும் அவரது உறவினர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சோன்பத்ராவுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்றார். ஆனால், போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.  அவரை தடுப்புக் காவலில் எடுத்துச் சென்று விருந்தினர் மாளிகையில் போலீஸார் தங்கவைத்தனர்.

சோன்பத்ரா கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் செல்லவே மாட்டேன் என்று பிரியங்கா தொடர்ந்து பிடிவாதம் காட்டிவந்தார்.
இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) அவர் ஒருவழியாக சோன்பத்ரா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் பிரியங்கா காந்தியிடம் தங்கள் சோகத்தைப் பகிர்ந்து கதறி அழுதனர். அவர்களை பிரியங்கா சமாதானப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அரசு நிர்வாகம் அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும். அவர்களைப் பாதுகாத்திருக்க வேண்டும்" என்றார்.

முன்னதாக சோன்பத்ராவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 15 பேர் சுனார் விருந்தினர் மாளிகைக்கு பிரியங்காவை சந்திப்பதற்காக வந்தனர். ஆனால் அவர்களில் 3 பேரை மட்டுமே போலீஸார் அனுமதித்தனர். அவர்களைப் பற்றிச் சொல்லும்போது "உத்தரப் பிரதேச அரசும், போலீஸும் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னையும் பார்க்கச் செல்லவிடவில்லை. வந்தவர்களையும் அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் நீங்களாவது அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாதா" என்று பிரியங்கா கூறினார். 

தொடரும் 144:
இதற்கிடையில் சோன்பத்ராவில் 144 தடை உத்தரவு தொடர்கிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அங்கித் அகர்வால் "பாதுகாப்பு காரணங்களுக்காக சோன்பத்ராவில் 144 தடை உத்தரவு தொடர்கிறது. அதனால் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் இங்கு வருவதைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நிலைமை சீராகும் வரை யாரும் அநாவசியமாக வர வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x