டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி மது குடித்திருந்தார்

டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி மது குடித்திருந்தார்
Updated on
1 min read

ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட கஜேந்திர சிங் என்ற விவசாயி மது அருந்தி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கஜேந்திராவின் உடற்கூறு ஆய்வின் முதல்கட்ட அறிக்கையை மருத்துவர்கள் குழு டெல்லி குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் கஜேந்திரா தூக்கு போட்டுக்கொண்டபோது மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸியிடம் கேட்டபோது, “உடற்கூறு அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும்” என்றார்.

எனினும் கடந்த கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வின்போது கஜேந்திரா தூக்கு போட்டுக் கொண்டதாகவும், கழுத்தில் காயம் இருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் அவர் மது குடித்திருந்ததாக தகவல் வெளியாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஆம் ஆத்மி சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஜேந்திரா மரத்தில் ஏறி தூக்கு போட்டுக் கொள்ளப் போவதாகக் கூறியபோதும் அதைத் தடுக்காமல் ஆம் ஆத்மி கட்சியினர் அதை ஊக்கப்படுத்தியதுடன் வேடிக்கை பார்த்ததாக போலீஸார் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதற்கிடையே, கஜேந்திராவுக்கு தூக்கிட்டுக் கொள்ளும் எண்ணம் இல்லை. ஆனால் அவர் நின்றிருந்த மரக்கிளை சிறியதாக இருந்ததால் வழுக்கி விழுந்திருக்கலாம் என்று சம்பவத்தைப் பார்த்த ஒரு சாட்சி தெரிவித்தார். மேலும் சிலர், மரத்தின் மீது ஏறிக்கொண்டு கோஷம் போட்ட கஜேந்திராவை மீட்க முயற்சி செய்தபோது அவர் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

ஆனால், இதுதொடர்பாக வெளியான ஒரு வீடியோ காட்சியில், கஜேந்திரா மரத்தின் மீது ஏறி, தனது துண்டை மரக்கிளையில் கட்டி, அதில் சுருக்கு போட்டு தனது தலையை நுழைத்துக்கொண்டு தூக்கில் தொங்குகிறார். நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை ஆம் ஆத்மி கட்சியினர் தடுத்து நிறுத்தாதது ஏன் என்று விவாதம் நடைபெற்றது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in