ரூ.28 கோடி தருவதாக பாஜக பேரம் பேசியது:  கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு

ரூ.28 கோடி தருவதாக பாஜக பேரம் பேசியது:  கர்நாடக அமைச்சர் குற்றச்சாட்டு
Updated on
1 min read

பெங்களூரு

பாஜகவில் இணைந்தால் ரூ. 28 கோடி தருவதாக மஜத அதிருப்தி எம்எல்ஏ ஒருவரிடம் பாஜக மூத்த தலைவர்கள் பேரம் பேசியதாக கர்நாடக அமைச்சர் சா.ரா.மகேஷ் கூறியதால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவையில் மஜத மூத்த தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான சா.ரா. மகேஷ் நேற்று பேசுகையில், “அதிருப்தியில் உள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை குறிவைத்து பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் விஸ்வநாத் பாஜக பக்கம் சாய்ந்ததை நினைத்தால் இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பே விஸ்வநாத்தை சந்தித்து, ‘அமைச்சராக விரும்புகிறீர்களா?’ என கேட்டேன்.

அதனை மறுத்த அவர், ‘எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் செலவுக்காக வாங்கிய கடனையே இன்னும் அடைக்கவில்லை. என் கடன் பிரச்சினையை தெரிந்துகொண்ட பாஜகவினர் தங்கள் கட்சியில் இணைந்தால் ரூ. 28 கோடி தருவதாக கூறினர். தேவகவுடாவுக்கு துரோகம் செய்ய மனம் வராததால் அந்தப் பணத்தை வாங்கவில்லை’ என்றார். இதை கேட்ட நான், ‘உங்கள் கடனை அடைக்க உதவுகிறேன்’ என்றேன். இப்போது எத்தனை கோடிக்கு அவர் விலை போனார் எனத் தெரியவில்லை” என்றார்.

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து பேசிய கோலார் தொகுதி மஜத எம்எல்ஏ சீனிவாஸ் கவுடா, “பாஜக தலைவர்கள் அஸ்வத் நாராயண், சிபி யோகேஷ்வர் ஆகியோர் கடந்த மாதம் என் வீட்டுக்கு வந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டனர். பாஜகவின் இணைந்தால் இப்போதே முன்பணமாக ரூ.5 கோடி தருவதாக கூறினர். அந்த பணத்தை ஏற்க மறுத்து விட்டேன்” என்றார்.

எம்எல்ஏ மறுப்பு

இந்நிலையில் அமைச்சர் சா.ரா. மகேஷின் குற்றச்சாட்டை மஜத எம்எல்ஏ விஸ்வநாத் மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “எனக்கு கடன் இருப்பது உண்மை தான். அதனை அடைக்க உதவுமாறு மகேஷிடம் கேட்டதும் உண்மைதான். ஆனால் பாஜகவினர் என்னிடம் பேரம் பேசியதாக அவரிடம் கூறவில்லை. பணத்திற்காக கட்சி மாற மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in