

புதுடெல்லி
பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (49) இந்தியாவுக்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாகக் கூறி 2016-ம் ஆண்டில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. குல்பூஷண் மீதான குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது.
கடற்படையில் இருந்து ஓய்வு பெற்று சொந்த வியாபார விஷயமாக ஈரானில் இருந்தபோது பாகிஸ்தானுக்கு அவர் கடத்தப்பட்டார் என்று இந்தியா தெரிவித்தது. நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது.
கடந்த புதன்கிழமை சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்திவைத்தது. தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குல்பூஷண் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து, குல்பூஷண் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்து உள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளி யுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சர்வதேச நீதி மன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப வியன்னா ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிப்பது தொடர்பான உரிமைகள் குறித்து குல்பூஷண் ஜாதவுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தானின் சட்டங்களின்படி குல்பூஷண் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும். அதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.