Published : 19 Jul 2019 06:45 PM
Last Updated : 19 Jul 2019 06:45 PM

சட்டப்பேரவை நடைமுறைகளை மாநில ஆளுநர் கட்டுப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக முதல்வர் மனு

 கர்நாடகா சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் குறித்த விவாதம் எந்த முறையில் நடைபெற வேண்டும் என்பதை மாநில ஆளுநர் வாஜுபாய் வாலா தீர்மானிக்க முடியாது என்று முதலவர் எச்.டி.குமாராசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவு செய்ய மாநில ஆளுநர் அடுத்தடுத்து இறுதிக்கெடுவை நிர்ணயித்ததை குமாரசாமி கேள்விக்குட்படுத்தினார். மேலும் 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை நடைமுறைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்த முடிஉயாது என்ற உச்ச நீதிமன்றத்தின் ஜூலை 17 உத்தரவின் மீதான தெளிவையும் விளக்கத்தையும் கோரியுள்ளார் குமாரசாமி.

வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கைத் தீர்மானம் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஆளுநர் வியாழனன்று அனுப்பிய அறிவுறுத்தல் குறித்தும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார் குமாரசாமி.

இது தொடர்பாக அவர் தன் மனுவில், “நம்பிக்கைத் தீர்மானம் ஏற்கெனவே தொடங்கப்பட்ட நிலையில் ஆளுநர் அறிவுத்தல் செய்ய முடியாது என்பதை மரியாதைக்குரிய முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குமாரசாமி குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடகா சட்டப்பேரவை தலைவர் கே.ஆர்.ரமேஷ் குமாரும் விவாதம் முடிந்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் என்று கருத்து தெரிவித்திருந்தார். 

ஆகவே, “இந்தச் சூழ்நிலைகளில் நம்பிக்கை தீர்மானம் குறித்த விவாதம் இந்த முறையில்தான் நடக்க வெண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்த முடியாது” என்று மனுவில் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

வெள்ளிக்கிழமையன்று முதல்வர் குமாரசாமி ஆளுநருக்கு எழுத்து மூலம் அனுப்பிய அறிவிக்கையில், சட்டப்பேரவை ஏற்கெனவே நம்பிக்கை தீர்மானத்தை பரிசீலிக்கிறது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று குறிப்ப்பிட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.  ஆனால் ஆளுநர் மீண்டும் ஒரு அறிவிக்கையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

“ஆளுநரின் அறிவுறுத்தல்கள் ஆளுநரின் அதிகார எல்லைகளை நீதிமன்றம் வகுத்ததிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறானதாக ஆளுநரின் அறிவுறுத்தல்கள் இருக்கின்றன” என்று மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொறடா உத்தரவை மதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி வலியுறுத்துவது அரசியல் சாசனச் சட்டம் 10ம் ப்பிரிவின் கீழ் செல்லுபடியாவதே, ஆகவே அதனை மீறுமாறு செய்ய எந்த உத்தரவுக்கும் அதிகாரம் இல்லை. 

இவ்வாறு குமாரசாமி தன் உச்ச நீதிமன்ற மனுவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x