Published : 19 Jul 2019 04:48 PM
Last Updated : 19 Jul 2019 04:48 PM

சமூக நீதியும், மனித உரிமைகள் இயக்கங்களுமே இச்சமூகம் நிலைத்திருக்கக் காரணம்: மக்களவையில் கனிமொழி பேச்சு

சமூக நீதியும், மனித உரிமைகள் இயக்கங்களுமே இச்சமூகம் நிலைத்திருக்கக் காரணம் என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார்.

மக்களவையில் இன்று (ஜூலை 19) மனித உரிமைகள் பாதுகாப்பு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் பேசிய திமுக எம்.பி., கனிமொழி, "இந்த அவையில் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். எனது மூதாதையார்கள் யாரும் ரிஷிகள் அல்ல. எனது மூதாதையர்கள் மனிதர்கள். எனது பெற்றோர் சூத்திரர்கள். என் மாநிலத்தைச் சேர்ந்த பலரும் இன்று இந்த அவையில் இருப்பதற்குக் காரணம் எங்கள் மண்ணில் உள்ள சமூக நீதி இயக்கங்களும், மனித உரிமைகளை நிலைநாட்ட நாங்கள் இன்றளவும் முன்னெடுக்கும் போராட்டங்களுமே. 

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா பாரீஸ் கோட்பாடுகளுக்கு உட்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இந்த மசோதா அந்த கோட்பாடுகளின்படி நிற்கவில்லை. 

வெவ்வேறு அமைச்சகங்களில் இருந்து மனித உரிமைகள் ஆணையத்துக்கான தலைவர்களை நிர்ணயிக்க வேண்டிய அவசியம் என்ன?
காலங்காலமாக பெண்கள் உரிமையையும், குழந்தைகள், தலித் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளையும் பாதுகாக்கப் போராடும் என்.ஜி.ஓ.க்களும், சமூக செயற்பாட்டாளர்களும்  தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற வேண்டும். நியமனங்களில் தகுதிகளை மாற்றியமைப்பது இந்த கவுன்சிலின் சுயாட்சியை நீர்த்துப்போகச் செய்யும்,

தற்போதைய நிலவரப்படி இந்த ஆணையத்தில் 20% மட்டுமே பெண்கள் இருக்கின்றனர். 50% வரை பெண் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். 

இந்தியா மனித உரிமைகளை அத்துமீறுவதில் 28-வது இடத்தில் இருக்கிறது. இது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். பாதுகாப்புப் படையினர் அரங்கேற்றும் அத்துமீறல்கள் எதையுமே மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாத நிலையே இருக்கிறது. பல் இல்லாத ஓர் இயக்கமாகவே அது இருக்கிறது.

போலீஸ் கஸ்டடி மரணங்கள் இருமடங்காக அதிகரித்துள்ளது. 2016-க்குப் பின்னர் இந்த அரசாங்கம்  மிக மிக தோதாக குற்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. இதுவே, இந்த அரசாங்கம் மனித உரிமைகள் விவாகரத்துக்கு அளிக்கும் முக்கியத்துவம் என்னவென்பதை பறைசாற்றுகிறது.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் மேம்போக்கானவையே. எனவே மனித உரிமைகளை உண்மையிலேயே தூக்கி நிறுக்கம் திருத்தங்களுடன் மசோதாவைக் கொண்டுவர வேண்டும் தற்போதைய மசோதாவை வாபஸ் பெறவேண்டும்.

சமூக நீதியின் சாட்சியாக விளங்கிய நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். மனித உரிமைகளை மறுப்பது மனிதத்தையே மறுப்பதற்கு சமம் என்று அவர் கூறினார். நாம் அனைவரும் மனிதர்கள். நமக்கு மனித உரிமைகள் பேணப்பட வேண்டும்" என்றார்.

ஆனால், மக்களவையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மசோதா தாக்கலானது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x