

புதுடெல்லி
பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக பாஜக தலைவர்கள் மீதான வழக்கை 9 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அயோத்தியில் பிரச்சினைக் குரிய இடத்தில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்கு உத்தரபிரதேசத்தின் லக்னோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை 2019-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதிக்குள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. விசாரணை நடத்தும் நீதிபதியை மாற்ற வேண்டாம் என்றும் தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், லக்னோ செஷன்ஸ் நீதிபதி எஸ்.கே.யாதவ் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளார்.
அதற்குள்ளாக வழக்கு விசாரணையை முடிக்க முடியாத நிலையில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்தநிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை 9 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.