Published : 19 Jul 2019 12:18 PM
Last Updated : 19 Jul 2019 12:18 PM

ஒசூர்- பெங்களூரு இடையே மெட்ரோ ரயில்: செல்லக்குமார் மக்களவையில் கோரிக்கை 

ஆர்.ஷபிமுன்னா

தமிழகத்தின் ஒசூர் மற்றும் கர்நாடாகாவின் பெங்களூரூவிற்கு இடயே மெட்ரோ ரயில் விட வேண்டும் என காங்கிரஸ் எம்.பியான டாக்டர்.ஏ.செல்லக்குமார் கோரினார். இதை அவர் நேற்று மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் வலியுறுத்தினார்.

இது குறித்து கிருஷ்ணகிரி தொகுதி எம்.பியான டாக்டர்.செல்லக்குமார் பேசியதாவது: எனது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியின் ஒசூர், சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்களுடனான ஒரு பரந்த முனிசிபாலிடி ஆகும். இதை தமிழகம் தன் கொள்கை அளவில் ஒரு மாநகராட்சியாக அறிவித்துள்ளது. 

இது ஒரு பெரிய தொழில்நகராமாகவும் உள்ளது. பெரும்பாலான பெருநிறுவனங்களின் பிரிவுகளும், சுமார் 3000 சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இங்கு அமைந்துள்ளன. கர்நாடகா மாநிலத் தலைநகரமான பெங்களூரூவில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. 

கீழ்நிலை முதல் முக்கிய நிர்வாகிகள் வரையில் அனைத்து வகையான பொறுப்புகளின் வேலைவாய்ப்புகளையும் ஒசூர் அளிக்கிறது. இதனால்,  தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே ஆயிரக்கணக்கானவர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர்.

பெங்களூரூவின் ’எலக்ரானிக் சிட்டி’ ஒசூரில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எனவே, இருமாநிலங்களுக்கு இடையிலான சாலைகளில் அன்றாடம் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. பெங்களூரூவில் உள்ள மெட்ரோ ரயில், பம்மச்சந்திரன் எலக்ரானிட் சிட்டி வரை அமைந்துள்ளது.

இந்த மெட்ரோ ரயிலை அத்திப்பள்ளி வழியாக ஒசூர் வரை நீடித்தால் அவ்விரு மாநில மக்களுக்கும் பெரும் எழுச்சியாக இருக்கும். இதுபோல், இருமாநிலங்களை மெட்ரோ ரயில்களால் இணைப்பது புதிய விஷயமல்ல.

இதற்கு முன், டெல்லியின் மெட்ரோ ரயில் உபி மற்றும் ஹரியனா மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, பாரத் மெட்ரோ ரயில் கார்பரேஷன் லிமிடெட் மூலமாக மத்திய அரசு தமிழகம் மற்றும் கர்நாடகாவையும் ரயில் பாதை அமைத்து இணைக்க வேண்டும்.’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x