எடியூரப்பா கர்நாடக முதல்வராக வேண்டி பாஜக பெண் எம்.பி. சிறப்பு பூஜை: 1001 படிகள் ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினார்

எடியூரப்பா கர்நாடக முதல்வராக வேண்டி பாஜக பெண் எம்.பி. சிறப்பு பூஜை: 1001 படிகள் ஏறி நேர்த்திக்கடன் செலுத்தினார்
Updated on
1 min read

எடியூரப்பா கர்நாடக முதல்வராக வேண்டி சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு 1001 படிகள் ஏறிச் சென்று நேர்த்திக்கடனை செலுத்தினார் பாஜக பெண் எம்.பி. ஒருவர்.

கர்நாடக அரசியலில் தொடர்ந்து பல நாட்களுக்கு குழப்பமான சூழல் நிலவி வருகிறது. தங்கள் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ், மஜத அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது. அதே போல் எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கொறடாவும் அவர்களை நிர்பந்திக்கவும் முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பி வழங்கியிருந்தது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 18) நடைபெறவிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பல்வேறு காரணங்களால் தடைபட்டது. சட்டப்பேரவையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவின்றி, அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தியது. மேலும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பாஜக கடத்தி விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது.இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் பாஜக எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இத்தகைய சூழ்நிலையில், பி.எஸ்.எடியூரப்பா மீண்டும் கர்நாடக முதல்வராக வேண்டிய பாஜக எம்.பி. ஷோபா இன்று (வெள்ளிக்கிழமை) சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு 1001 படிகள் வழியாக ஏறிச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்.

இதற்கிடையில், மீண்டும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமையும் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in