ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மன்சூர் கான் கைது

ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மன்சூர் கான் கைது
Updated on
1 min read

முதலீட்டாளர்களிடம் ரூ.2500 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கர்நாடகாவில் உள்ள ஐஎம்ஏ., பொன்சி நிறுவனத் தலைவர் முகமது மன்சூர் கான் கைது செய்யப்பட்டார்.

ஐ மானிட்டரி அட்வைஸரி (I Monetary Advisory - IMA) என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார் முகமது மன்சூர் கான். 2006-ம் ஆண்டு இந்த நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிலையில் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.2500 கோடி மோசடி செய்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஜூன் மாதம் மன்சூர் வெளிநாடு தப்பிச் சென்றார்.

இது தொடர்பாக கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து விசாரணையைத் தொடங்கியது. இந்தக் குழுவானது மன்சூர் முகமது கான் துபாயில் பதுங்கியிருப்பதை உறுதி செய்தது. மன்சூர் மீது லுக் அவுட் நோட்டீஸூம் உள்ளது.  இந்நிலையில், அவரை இந்தியா வரும்படி அந்தக் குழு வலியுறுத்தியது.

இதனையடுத்து துபாயில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் இன்று (ஜூலை 19) அதிகாலை மன்சூர் வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அமலாக்கப் பிரிவினர் அவரை கைது செய்தனர்.

முன்னதாக வெளிநாடு தப்பிச் சென்ற மன்சூர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஓர் ஆடியோ கிளிப்பையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கானுக்கும் கர்நாடக எம்எல்ஏவுக்கும் என்ன தொடர்பு?

கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போலீஸாரால் விசாரிக்கப்பட்டார். வெளிநாடு தப்பியோடிய மன்சூர், ரோஷன் பெய்க் தன்னிடம் ரூ.400 கோடி கடன் வாங்கியதாகக் கூறியிருந்த நிலையில் ரோஷன் பெய்கிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் ரோஷன் பெய்க், தன்னை பழிவாங்கவே அரசு விசாரணைகளைத் தூண்டிவிடுவதாகக் கூறினார்.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in