நெக்ஸ்ட் மருத்துவத் தேர்வுக்கு திமுக கடும் எதிர்ப்பு

நெக்ஸ்ட் மருத்துவத் தேர்வுக்கு திமுக கடும் எதிர்ப்பு
Updated on
1 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

மருத்துவம் பயிலும் மாணவர் களுக்கு பட்டமேற்படிப்பில் சேர இறுதியாண்டில் ‘நெக்ஸ்ட்’ எனும் பெயரில் புதிய தேர்வு நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு மக்களவையில் நேற்று திமுக உறுப்பினர் கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் கனிமொழி மக்கள வையில் நேற்று பேசியதாவது:

மத்திய அமைச்சரவை தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இது இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மாற்றாக இருக்க உள்ளது. இதில், மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ‘நெக்ஸ்ட்’ என்ற பெயரில் தேசிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. . இதை நாங்கள் எதிர்க்கிறோம்.

இது, அகில இந்திய அளவில் மருத்துவத் துறைக்கு இன்னொரு பொதுத் தேர்வாக அமையும். ஏற்கெனவே மருத்துவப் படிப்பு களில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட அரசுகள் எதிர்த்து வருகின்றன.

நீட் தேர்வால் பல மாணவர் கள் தற்கொலை செய்து கொண் டிருக்கிறார்கள். இந்த விவகாரம் பற்றி எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில் எழுப்பியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

பேச அனுமதி மறுப்பு

மேற்கொண்டு பேச, கனிமொழிக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தனது உரையை அவர் பாதியிலேயே முடித்துக் கொண்டார். முன்னதாக, இறுதியாண்டு மாணவர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள நெக்ஸ்ட் பொதுத் தேர்விற்கு எதிராக விவாதிக்க, திமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுக்கப் பட்டது.

ஆனால், சபாநாயகர் ஒத்தி வைப்புத் தீர்மானத்தை ஏற்க மறுத்து விட்டார். இதனால், பூஜ்ஜிய நேரம் முடியும் தருவாயில் எழுந்த கனிமொழி, தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in