நான் பெயர்களை வெளியிட்டால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?: கட்சித் தாவும் காங்., என்சிபி எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை வெளியிட மறுத்த பாஜக

நான் பெயர்களை வெளியிட்டால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?: கட்சித் தாவும் காங்., என்சிபி எம்.எல்.ஏ.க்கள் பெயர்களை வெளியிட மறுத்த பாஜக
Updated on
1 min read

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல்கள் இன்னும் 3 மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவும் முடிவில் இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

அதாவது தன்னை பல தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணுகியுள்ளதாகவும் 8-10 நாட்களில் அவர்கள் ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைவார்கள் என்றும் தெரிவித்தார் சந்த்ரகாந்த் பாட்டீல்.  வரும் வாரங்களில் எதிர்க்கட்சி பல ராஜினாமாக்களை எதிர்கொள்ளும் என்றார். 

“எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 மாத காலம் முன்னதாக ராஜினாமா செய்திருந்தால் இடைத்தேர்தல் வந்திருக்கும். இப்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு  3மாதங்களே உள்ள நிலையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் ராஜினாமா செய்யவுள்ளனர். காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் 8-10 நாட்களில் ராஜினாமா செய்கின்றனர். பல உறுப்பினர்கள் எங்களை அணுகி வருகின்றனர். சரியான தருணத்தில் இவர்களுக்கு கட்சியில் இடம் ஒதுக்கப்படும்” என்றார் சந்த்ரகாந்த் பாட்டீல். 

ஆனால் யார் அந்த எம்.எல்.ஏ.க்கள் என்ற பெயர்களை வெளியிட மறுத்த பாட்டீல், “நான் பெயர்களை வெளியிட்டு விட்டால் அதில் என்ன கேளிக்கை உள்ளது, நிச்சயமின்மையில்தான் வாழ்வின் மகிழ்ச்சி உள்ளது” என்றார் சூசகமாக.  ‘முன்னணி தலைவர்கள் ராஜினாமா செய்யும் போது கட்சியில் கீழ் உள்ளவர்கள் எப்படி கட்சியுடன் சேர்ந்து பணியாற்றும் நம்பிக்கை வரும்’ என்கிறார் பாட்டீல். 

இவர்கள் கட்சி மாறி பாஜக இவர்களுக்கு தொகுதி ஒதுக்கினால் ஏற்கெனவே உள்ளவர்கள் அதிருப்தி அடைய மாட்டார்களா? என்று கேட்ட போது, “பாஜகவின் பழைய உறுப்பினர்களுக்கு எந்த வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது” என்றார்

“பாஜக-சிவசேனா கூட்டணி குறைந்தது 220 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று திட்டமிடுவதால், வெற்றி பெறும் வேட்பாளர்கள்தான் களமிறக்கப்படுவார்கள்” என்றார் பாட்டீல். 

காங்கிரஸ் மறுப்பு:

மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் தலைவர் பாலாசாஹேப் தோரட்,  “பாஜக தலைவரின் இத்தகைய கூற்றுக்களில் உண்மையில்லை என்பதோடு சிரிப்பு வரவழைப்பதாக உள்ளது” என்று நிராகரித்தார், இவையெல்லாம் கோயபெல்ஸ் ரக வதந்திகள் என்கிறார் காங். எம்.எல்.ஏ. டாக்டர் விஸ்வஜித் காதம். 

இவ்வாறு மறுத்த டாக்டர் காதமே இன்னும் 15-20 நாட்களில் பாஜகவில் சேர்வார் என்று சந்த்ரகாந்த் பாட்டீல் ஏற்கெனவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in