Published : 18 Jul 2019 02:28 PM
Last Updated : 18 Jul 2019 02:28 PM

கர்நாடக சட்டப்பேரவைக்கு மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ வரவில்லை: நெஞ்சுவலி எனக் கூறி மும்பை மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமத் பாட்டீல் நெஞ்சுவலி எனக் கூறி மும்பை சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதனால் வாக்கெடுப்பின்போது ஆளும் கூட்டணி அரசுக்கு மேலும் ஒரு வாக்கு இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.

கர்நாடகா சட்டப்பேரவையில் இன்று பலத்த பாதுகாப்புடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அவையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

தற்போதைய நிலையில், 224 எம்எல்ஏக்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மஜத (37), காங்கிரஸ் (78), பகுஜன் சமாஜ் (1), சுயேச்சைகள் ( 2) கூட்டணியின் பலம் 118 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது.

அண்மையில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் 16 பேர் ராஜினாமா செய்துள்ள நிலையில், 2 சுயேச்சைகளும் ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால், குமாரசாமி அரசின் பலம் 100-ஆக குறைந்துள்ள அதே வேளை 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜகவின் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது.

மும்பையில் உள்ள 16 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்கும்பட்சத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 105 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்தநிலையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் இந்த இக்கட்டான தருணத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அல்லாமல் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ அவைக்கு வரவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீமத் பாட்டில் பெங்களூருவில் உள்ள பிரக்ருதி சொகுசு ஓட்டலில் மற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தங்கி இருந்தார். ஆனால்  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி அங்கிருந்து புறப்பட்டார். பெங்களூருவில் இருந்து விமானத்தில் நேற்று இரவே மும்பை சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் தற்போது  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களை அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது அவர் அதில் பங்கேற்பாரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x